
தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டம், தமிழ்நாட்டில் உள்ள
அனைத்துவகை பள்ளிகளிலும், தமிழ் மொழியை கட்டாய பாடமாகக் கற்பிக்க வகை செய்கிறது. இந்நிலையில், தமிழ் கற்றல் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர வாரியங்களின் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழை எளிமையாகவும், விருப்பமாகவும் படிக்கவும் அனைத்து
மாவட்டங்களிலும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் பணிபுரியும் 6 ஆயிரம் தமிழாசிரியர்களுக்கு
பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
அந்த வகையில், முதல்கட்டமாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: இந்த முகாமில், தமிழாசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த தமிழாசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்டு இலக்கணம், பாடப்பொருள், செய்யுள், உரைநடை, மதிப்பீடு ஆகிய 5 பகுதிகளாக பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல தனியார் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் எங்கள் குடும்பம்தான்.
இருமொழிக் கொள்கையை உயர்த்திப் பிடித்து சட்டமாக்கிய அண்ணா பெயரில் இயங்கும் இந்த நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் இந்த நிகழ்வும் பொருத்தமாக இருக்கிறது. கடந்த ஆண்டும் இதுபோன்ற பயிற்சி அளிக்கப்பட்டது. நம்மையே நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அவ்வப்போதுள்ள தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவுசார்ந்த விஷயங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். நமது மாணவர்கள் நம்மைவிட செயற்கை நுண்ணறிவு, சாட் ஜிபிடியிடம் தான் அதிகம் கேட்கின்றனர்.பிற தொழில் நுட்பங்களை நாம் கருவிகள் மூலம் கற்பதைவிட ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையின் மூலம் பாடம் நடத்தும் போது கற்றுக்கொள்வதைப்போல வேறு எதுவும் நமக்கும் பெரிய பயனுள்ளதாக இருக்க முடியாது. எந்த தொழில் நுட்பத்தினாலும் அதை கொடுத்துவிட முடியாது. இந்நிலையில், தமிழ் மொழியை நாம் உயர்த்திப் பிடித்தே ஆகவேண்டும்.
அந்த மொழி இல்லாமல் போய்விட்டால் நாம் நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை இழந்துவிடுவோம். 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பைத் தமிழன் பயன்படுத்தி இருக்கிறான் என்ற பெருமையை நாம் பார்த்திருக்கிறோம். பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நமது தமிழ் மொழி எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக கீழடி, கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உணர்த்துகின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 8 இல் உள்ள 22 மொழிகளையும் படிக்கலாம் அதில் எந்தத்தவறும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் நமக்கு செல்போன் முக்கியமாகத் தோன்றுகிறது. செல்போனை நாம் உயர்த்திப் பிடிக்கும் நாம் செம்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
