
ஜூலை 9 அன்று இந்திய ஒன்றிய அளவில் தொழிற்சங்கங்கள், பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்……
தொழிற்சங்க உரிமைகளையும் தொழிலாளர் உரிமைகளையும் பறிக்கும் ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கள் நாளை (ஜூலை-9) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இந்தப் பொது வேலைநிறுத்தத்திற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது.
பத்திரிகையாளர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம்-1955, கால வளர்ச்சிக்கேற்ப ஊதிய விகிதத்தில் மாற்றம் செய்வதற்கான ஊதியக்குழு சட்டம் (Wage Board Act) மற்றும் உரிமைகள் பறிக்கப்பட்டால் போராடிப் பெறுவதற்கான தொழில் தகராறு சட்டம் உட்பட 44 சட்டங்களை நீக்கிவிட்டு, நான்கு சட்டத் தொகுப்புகள் (Labour Code) கொண்டுவரப்பட்டுள்ளன.
இவை பணிப் பாதுகாப்பை முற்றாக அழித்துவிட்டு, ஒப்பந்தப் பணி முறையை (கான்ட்ராக்ட்) நடைமுறைப்படுத்தக் கூடியது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையையும் தொழிலாளர் உரிமைகளையும் பறிக்கக் கூடியது. இத்தகைய தொழிலாளர் விரோத, பத்திரிகையாளர் விரோத சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் சங்கம்(MUJ) வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


