
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் என்.சந்திரசேகரன் மற்றும் அதிமுக அணியில் இருந்த பாமக தலைவர் அன்புமணி இராமதாசு ஆகியோரது பதவிக் காலம் முடிவடைந்தது. இதனால் 2 மாநிலங்களவை வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அதிமுக தீவிரமாக இருந்தது.
சில நாட்களாக இழுபறியில் இருந்த நிலையில் அதிமுகவின் வேட்பாளர்களை அக்கட்சியின் மூத்த தலைவர் கேபி முனுசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி, அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செய்யூர் தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவில் மூத்த வழக்கறிஞரும் கிறித்துவருமான பி.வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது. அதே பாணியில் அதிமுகவும் மூத்த வழக்கறிஞரும் கிறித்துவருமான இன்பதுரையை வேட்பாளராக அறிவித்துள்ளது.
அதிமுகவில் பதவிக்காலம் முடிவடையும் சந்திரசேகரன், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் ஆதி திராவிடர், தேவேந்திர குல வேளாளர் சமூகங்களைச் சேர்ந்த முன்னாள் சமஉக்களான செய்யூர் தனபால், சதன் பிரபாகரன், சங்கரன்கோவில் இராஜலட்சுமி ஆகியோரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் செய்யூர் தனபால் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். செய்யூர் தனபால் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
அதோடு, அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்றும் இன்னொரு இடத்துக்கு அதிமுகவுக்கு என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இம்முறை மாநிலங்களவை உறுப்பினர் இடம் கொடுத்தால்தான் 2026 தேர்தலில் கூட்டணி என்று நிபந்தனை விதித்தது தேமுதிக.அக்கட்சியைச் சமாதானப்படுத்தி கூட்டணியில் தொடர வைத்திருக்கிறார்கள்.


