முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது.2026 தேர்தலையொட்டி எல்லோரையும் ஒருங்கிணைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அதேசமயம்,சசிகலா ஓபிஎஸ் ஆகியோரோடு மீண்டும் சேர்ந்தால் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று எடப்பாடி பழனிச்சாமி யோசிக்கிறார்.அதனால் இந்த ஒருங்கிணைப்புக்கு அவரே பல்வேறு தடைகளை ஏற்படுத்திவருகிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் நேற்று சென்றார்.காலை தனுஷ்கோடியில் உள்ள சேது தீர்த்தத்தில் புனித நீராடினார். காசி – இராமேஸ்வரம் யாத்திரை மேற்கொண்டுள்ள ஓபிஎஸ் கடந்த மே 2 ஆம் தேதி இராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடி புண்ணிய தீர்த்தத்தை காசி எடுத்துச் சென்றார். அங்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி விட்டு, காசி கங்கை நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் இராமேஸ்வரம் கோயிலில் வழிபாடு நடத்த நேற்று குடும்பத்துடன் சென்றார்.
இராமநாத சுவாமி மூலவர் சன்னதி அருகே உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி முன்பு 45 நிமிடங்கள் ருத்ராபிஷேக பூஜை நடைபெற்றது.
இந்த பூஜை செய்வதால் பாவங்கள் நீங்கி, இது செல்வத்தை ஈர்க்கும், கஷ்டங்களை போக்கும். எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்; நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. பூஜைக்கு பின் மூலவருக்கு கங்கை, பால், கோடி தீர்த்த அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்து காசி – இராமேஸ்வரம் யாத்திரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்வின் போது மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஓபிஎஸ் செய்த இந்த பூஜை,எடப்பாடி பழனிச்சாமிக்குப் பயத்தைக் கொடுத்துள்ளது என்கிறார்கள். எடப்பாடியும் இதுபோன்ற பூஜை புனஸ்காரங்களில் பெரும் நம்பிக்கை கொண்டவர்.அதனால் ஓபிஎஸ் குடும்பம் செய்திருக்கும் இந்த பூஜையால் ஓபிஎஸ் நினைத்தது நடந்துவிட்டால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்றெண்ணி அச்சப்படுகிறார் என்கிறார்கள்.