பேரறிவாளனை பரோலில் விட ஜெயலலிதாவுக்கு மனம் வருமா? எதிர்பார்ப்பில் உறவினர்கள்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தாராளமாக பரோல் தரப்பட்டது குறித்த சர்ச்சைகள் ஓயாத நிலையில், தண்டனை முடிய சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே, அவர் கடந்த 25ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் ராஜீவ் கொலைவழக்கில் 25 ஆண்டுகளாக சிறைவாசமிருக்கும் பேரறிவாளனுக்கோ, கடைசிக் காலத்தில் சிகிச்சை பெற்றுவரும் அவரது தந்தையைப் பார்க்க பரோல் கிடைத்தபாடில்லை.

இது பற்றி பேரறிவாளனின் உறவினர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடம் பேசுகையில்,

சிறைக்கைதிகள் விடுப்பில் (பரோலில்) செல்ல உரிமை உண்டு. ஆனாலும் கடந்த 25 ஆண்டுகளாக பரோல் கேட்காமல் இருந்தார், தம்பி.

தற்போது, அவருடைய தந்தை குயில்தாசன் ரொம்பவும் முடியாமல் இருக்கிறார். மருத்துவ மனையிலிருந்து ஜோலார்பேட்டை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திட்டோம். இதுக்குப் பிறகுதான் பரோல் கேட்டார் அறிவு.

பரோலில் அவரை அனுப்ப சிறைக் கண்காணிப்பாளருக்கே அதிகாரம் இருக்கு. ஆனா, ஆட்சித் தலைமையின் உத்தரவை எதிர்பார்க்கிறாங்க.

அதனால கடந்த 8ம் தேதி வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், முதல்வரின் செயலாளர்கள், தலைமைச் செயலாளர், ஆலோசகர்கள் கிட்ட பரோல் பத்திப் பேசியிருக்கார்.

முதலமைச்சர்கிட்ட சொல்றோம்னு அவங்க சொன்னதா தகவல். இப்பவரை எந்த பதிலும் இல்ல என்றனர். சினிமா இயக்குநர்களும் பேரறிவாளனை சந்தித்து நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையில், இதே வழக்கில் சிறைவாசம் இருந்துவரும் நளினிக்கு, கடந்த வாரம் அவரின் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல் கிடைத்தது.

நளினியின் அப்பாவும் இதேபோலத் தான் முதுமை, நோயால் அவதிப்பட்டு வந்தார். 2014ல் தன் தந்தையின் இறுதிக் காலத்தில் அவரைக் கவனிக்க பரோல் கேட்டார் நளினி. அப்போது பரோல் மறுக்கப்பட்டது.

அதனால் மன உளைச்சலுக்கு ஆளான நளினி, தன் தாயார் பத்மாவிடம் சொல்லி வேதனைப்பட்டார். கடைசியில் நளினியின் அப்பா சங்கரநாராயணன் இறந்த பின்னரே, அவருக்கு 12 மணி நேரம் பரோல் கிடைத்தது!

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,  161 விதியின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்யலாம். அதுதான் தாமதமாகிறது என்றால் விடுப்பும் தாமதமாகிறது.

மனரீதியாகவும் ரொம்ப சோர்ந்து போயிட்டோம்; அறிவும் சோர்ந்துட்டான். அவன் வரணும்ப்பா என்று சிறு நம்பிக்கைக் கீற்றையும் விட்டு விடாதபடி சொன்னார்.

இதற்கிடையே, பேரறிவாளனுக்கு சிறுநீர்த் தொற்று மீண்டும் சிக்கலை உண்டாக்க, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் சிறைத்துறையினர்.

தேர்தல் லாபம் கருதியாவது பரோலுக்கு மனம் இரங்கும் ஜெ. அரசு என எதிர்பார்க்கிறார்கள் உணர்வாளர்கள்.

Leave a Response