
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி பேசியதாவது….
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. சட்டம்-ஒழுங்கையும் பாதுகாக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு, பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்தார் பழனிச்சாமி. அப்போது எங்களைப் பார்த்து அடிமை என்றார்கள். தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவது அடிமைத்தனம் கிடையாது.
மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருந்ததால்தான் திட்டங்களைப் பெற முடிந்தது. மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய நாங்கள் யாருடனும் இணக்கமாக செல்லத் தயாராக இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் நிதியைப் பெற்றுத் தருவோம்.
திமுக மீது மக்களுக்கு செல்வாக்கு குறைந்ததால்தான், மும்மொழிக் கொள்கை மற்றும் மக்களவைத் தொகுதி மறுவரையறை பிரச்சினையைக் கையில் எடுத்து, மக்களை திசை திருப்புகிறார்கள். வரும் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து மட்டும்தான் பேச வேண்டும். கல்வி, நிதி குறித்த பிரச்சினைகளை திமுக பேசக் கூடாது. ஒருவர் (தவெக தலைவர் விஜய்) அடுத்த 62 வாரங்கள் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்கிறார். அவரே இதை கூறிக் கொள்ளக்கூடாது. மக்கள் தான் அதைக் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மார்ச் 5 ஆம் தேதி திமுக அரசு கூட்டியுள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சியான தமாக ஆகியன பங்கேற்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதேநேரம் பாஜகவுடன் இரகசியப் பேச்சுவார்த்தையில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்போம் என அறிவித்துவிட்டார்.
இதனால் பாஜக தரப்பிலிருந்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது.அதன் விளைவுதான்,எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தார்,மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய யாருடனும் இணக்கமாக இருப்போம் என்று கூறியதோடு பாஜகவைப் பாதிக்கிற தமிழ்நாட்டின் கல்வியைச் சீரழிக்கும் கல்வி நிதி குறித்த சிக்கலைப் பேசக்கூடாது என்றும் நிபந்தனை வைத்திருக்கிறார்.
அவருடைய இந்தப் பேச்சு மூலம் 2026 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமையும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


