திமுக அரசு மீது விடுதலைச்சிறுத்தைகள் விமர்சனம் – பரபரப்பு

இந்திய விமானப் படையின் 92 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, சென்னையில் மிக பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணிவரை நடந்தது. இதையொட்டி, காலை 8 மணி முதலே மெரினாவில் மக்கள் குவியத் தொடங்கினர். சென்னை மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், பறக்கும் ரயில் (எம்ஆர்டிஎஸ்), மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மெரினா பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம்: சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு – மெரினா பகுதியில் 15 லட்சம் பேர் திரண்டிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும், அனை வரும் ஒரே நேரத்தில் வெளியேறத் தொடங்கினர். இதனால், சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கடும்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வெயிலும் அதிகமாக இருந்ததால், 240-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.

மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

அதில் திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வரிசையில் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் இணைந்துள்ளார். அவருடைய சமூக வலைதளப் பதிவில்….

மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் ‘வான்படை சாகச’ கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது.

கொளுத்தும் வெயிலில் சுமார் பத்துலட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும்.சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். இந்த நிகழ்விலோ கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை.ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒருங்கு படுத்தவில்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது.அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.

இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை,சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது.

அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது.
எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும்.

அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவரும் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response