இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் தேசியக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கு காங்கிரசு மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு முன்னணி நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது….
காதி துணியினால் செய்யப்பட்ட தேசியக் கொடி தேசியப் பெருமையின் உருவகமாக உள்ளது.தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதில் பிரதமர் மோடி இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடித்து வருகிறார்.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருளுடன் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் கொடிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவரது இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
இந்திய தேசியக் கொடி என்பது வரலாற்று ரீதியாக கையால் நெய்யப்பட்ட காதி துணியினால் செய்யப்பட வேண்டும்.
மேலும், காதி என்பது நமது கடந்த கால கலாச்சாரத்தின் அடையாளம்.இந்திய நவீனத்துவம் மற்றும் பொருளாதார உயிர்சக்தியின் சின்னமாக அது திகழ்கிறது.இந்த நித்திய அடையாளங்களுக்கு மதிப்பளித்து தேசியக் கொடியை காதியினால் மட்டுமே உருவாக்க வேண்டும்.
ஆனால், 2022 ஆம் ஆண்டில் நமது சுதந்திர தினத்தின் 75 ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது இந்த விதிமுறையை மத்திய அரசு திருத்தியது காதி தொழிலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இயந்திரத்தால் செய்யப்பட்ட பாலியஸ்டர் தேசியக் கொடி பயன்பாட்டுக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டித்து கர்நாடகாவின் ஹுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கர்நாடாக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம் (கேகேஜிஎஸ்எஸ்) பிஐஎஸ் அங்கீகாரம் பெற்ற நாட்டின் ஒரே தேசியக் கொடி உற்பத்திப் பிரிவானது காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.
2014 ஆம் ஆண்டு முதலே பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், அதேசமயம், நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் மற்றும் நமது தாயகமாக விளங்கும் கைத்தறித் தொழில்களைச் சிதைக்கும் செயலில் அரசு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.
ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமல், கோவிட் லாக்டவுன் காரணமாக ஆயிரக்கணக்கான கைத்தறித் தொழிலாளர்கள் தங்களது தொழிலை விட்டு வெளியேறிவிட்டனர். காந்தியின் அடையாளமான காதி அதன் சொந்த தேசத்தில் மதிப்பிழந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.