புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது….
தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 ஆகியவற்றை இரத்து செய்து 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியுள்ளது. இந்த 3 சட்டங்களின் திருத்தம் போதிய ஆலோசனைகள் இல்லாமல் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப்பட்டியல் 3-க்குள் அடங்கும். எனவே மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக்கு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்படாததால், எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல் புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
பாரதிய நியாயா சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாக்ரிக்சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாக்ஷ்யா ஆதினியம் (பிஎஸ்ஏ) என்று 3 சட்டங்களுக்கும் சம்ஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. இது இந்திய அரசியலமைப்பின் 348 ஆவது பிரிவை தெளிவாக மீறுகிறது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் அனைத்துச் சட்டங்களும் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயமாகும்.
கூடுதலாக, இந்தச் சட்டங்களில் சில அடிப்படைப் பிழைகள் உள்ளன. உதாரணமாக, பாரதிய நியாயா சன்ஹிதாவில் 2 வெவ்வேறு வகை கொலைக் குற்றங்களுக்கு 2 உட்பிரிவுகள் உள்ளன. ஆனால் இவை இரண்டும் ஒரே தண்டனையைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தில், மேலும் சில விதிகள் உள்ளன. அவை தெளிவற்ற அல்லது சுயமுரண்பாடு கொண்டவையாகும்.
மேலும், இந்தப் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை திருத்துவதற்கு போதுமான நேரம் தேவைப்படும்.
இதன் அடிப்படையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு புதிய சட்டங்களை மறுபரிசீலனை செய்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சட்டங்களை நிறுத்தி வைக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.