விரைவில் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஒன்றியம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக இருக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டு அக்கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று மாலை அக்கட்சியினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…
திமுக கூட்டணியில் எங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த முதல்கட்டப் பேச்சுவார்த்தை சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் எங்கள் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டும் எங்கள் கட்சியே அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது. எனவே,இம்முறையும் அந்தத் தொகுதியையே எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டோம். அதை திமுகவும் ஒப்புக்கொண்டது.
எனவே, எங்கள் கட்சி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிருகிறது. எங்கள் கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற நவாஸ்கனியே மீண்டும் போட்டியிடுவார். எங்கள் கட்சியின் சின்னமான ஏணி சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அதோடு, மாநிலங்களவை இடம் ஒன்றை ஒதுக்கும்படி திமுகவிடம் இந்திய யூனியன் முஸ்லில்லீக் கட்சியினர் கேட்டுள்ளார்கள். அதற்கு, இப்போது மக்களவைத் தொகுதி குறித்து மட்டுமே பேசலாம், மாநிலங்களவை குறித்து பின்பு பேசிக்கொள்ளலாம் என்று திமுகவினர் கூறிவிட்டார்கள். இதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரே தெரிவித்தனர்.