நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு வெல்லும் இடங்கள்

சனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதில் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியால் 40 இடங்களில்கூட வெற்றி பெற முடியாது என மேற்கு வங்கத்திலிருந்து சவால் வருகிறது. ஆனால் காங்கிரசு குறைந்தபட்சம் 40 தொகுதியிலாவது பெற்றி பெற வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன்.

என்று பேசினார்.

சில நாட்களுக்கு முன் அவர்,வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும்.பாஜக மட்டும் 370 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறினார்.

அவ்வாறு அவர் கூறியதற்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக 370 இடங்கள் என்பதை இப்போதே முடிவு செய்து அதற்கேற்ப அந்த இயந்திரங்களை வடிவமைத்துவிட்டதாக விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில், காங்கிரசுக் கட்சிக்கு 40 தொகுதிகளாவது கிடைக்கவேண்டும் என்று அவர் பேசியிருப்பதைத் தொடர்ந்து, பாஜகவுக்கு 370 என்று திட்டமிட்டது போல் காங்கிரசுக்கு 40 இடங்கள் என்பதையும் இப்போதே முடிவு செய்து அதற்கேற்ப வாக்குப்பதிவு இயந்திரங்களை வடிவமைத்துவிட்டார்கள் என்கிற விமர்சனங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

மக்களாட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நாட்டில், மக்களின் ஒரே அதிகாரமான ஓட்டுப்போடும் அதிகாரத்தையும் அடாவடியாகக் கைப்பற்றிவிட்டார்கள் என்கிற கருத்து பேராபத்து ஏற்படுத்தும் கருத்து.இவ்வாறான விமர்சனங்கள் வராத வண்ணம் சார்ந்தோர் நடந்துகொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்து.

Leave a Response