திமுக சதியை முறியடிக்க நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் – எடப்பாடி முடிவு?

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று மதுரையில் நடைபெறவுள்ளது. மதுரை விமானநிலையம் அருகே நடக்கவிருக்கும் அம்மாநாட்டுப் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு காரணமாக சென்னை குரோம்பேட்டையில் மாணவர் ஜெகதீஸ்வரன் அவரது தந்தை ஆகியோர் தற்கொலை செய்தனர்.அதற்குச் சற்று முன்னதாக ஆளுநர் ஆர்.என்.இரவி நீட் தேர்வு சட்டமுன்வடிவில் நான் கையெழுத்திடமாட்டேன் என்று நேரடியாகவே பேசினார்.

திடுமென நடந்த இந்தச் செயல்களால் தமிழ்நாடே அதிர்ந்தது. அதன் விளைவாக, ஆளும் திமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று நீட் தேர்வு இரத்து கோரி உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதே ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாநாடு வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,

மதுரையில் அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 15 இலட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டைக் கண்டு பயந்த திமுக, என்ன செயவது எனத் தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்கள் என்று கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக மாநாட்டை பலவீனப்படுத்துவதற்காக திமுக இதை அறிவித்தது என்று நினைப்பதால் அதை முறியடித்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதனால் மாநாட்டில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவை உடனே ஏற்றுக்கொள்ள பாஜக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினால் தமிழ்நாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறலாம் என்கிற ஆலோசனை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதாம்.

எடப்பாடி பழனிச்சாமி அணியின் நலம்விரும்பிகள் கொடுத்துள்ள இந்த ஆலோசனையை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றுவார்களா? என்பது ஆகஸ்ட் 20 ஆம் தேதிதான் தெரியவரும்.

Leave a Response