எதிர்க்கட்சிக் கூட்டணிக்குப் பெயர் இந்தியா – பெங்களூருவில் அறிவிப்பு

இந்திய ஒன்றிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பலமான கூட்டணி உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் முயற்சி மேற்கொண்டார்.இதன்விளைவாக ஜூன் மாதம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் காங்கிரசு, திமுக, திரிணாமுல் காங்கிரசு, ஆம்ஆத்மி, சிவசேனா உள்பட 15 க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் 2 நாட்கள் நடந்தன. பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் வெஸ்டன்ட் நட்சத்திர விடுதியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, இராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர்கள் சரத்பவார், உத்தவ்தாக்கரே, ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத் யாதவ், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் கேரளா மாநில காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மணி, திரிணாமூல் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ.பிரைன் உள்பட 26 கட்சிகளைச் சேர்ந்த 43 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாவது நாள் கூட்டம் நேற்று பகல் 12.15 மணிக்குத் தொடங்கியது. இதில் ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசின் ஜனநாயக விரோதப் போக்கு குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்ததுடன் பாஜகவுக்கு எதிராக பலமான அணியைக் கட்டமைக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தனர்.

மேலும் கூட்டணிக்குப் புதிய பெயர் சூட்ட வேண்டும், கூட்டணியை வழி நடத்தக் குழு அமைக்க வேண்டும், குறைந்த பட்சச் செயல்திட்டம் வகுக்க வேண்டும், நாடு முழுவதும் சில மாநிலங்களில் மாநாடு, பேரணி நடத்த வேண்டும் என்ற கருத்துகளைத் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து 26 கட்சிகள் இணைந்துள்ள கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது என்று நிதிஷ்குமார், அகிலேஷ்யாதவ், லாலுபிரசாத் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், தொல். திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் ஒவ்வொரு பெயர்களைத் தெரிவித்தனர். இறுதியாக பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியான(என்டிஏ) கூட்டணிக்கு எதிராக நாட்டை வளமான பாதைக்குக் கொண்டு செல்லும் வகையில் இந்தியா (இந்தியன் நேஷனல் டெவலப்மென்ட்டல் இன்க்ளூசிவ் அலையன்ஸ்) என்ற பெயரில் கூட்டணி பெயர் சூட்டலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. அதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக கூட்டணி பெயருக்கு ஒப்புதல் வழங்கினர்.

கூட்டம் முடிந்த பின் காங்கிரசுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது….

நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பது மற்றும் மக்கள் நலன் காப்பது தான் இந்தக் கூட்டத்தின் முக்கியமான நோக்கம். பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒருமித்த குரல் எழுப்புவோம். எதிர்க்கட்சிகள் ஒரு பெயரில் இணைகிறோம். இனிமேல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இல்லை. புதிய கூட்டணியின் பெயர் இந்தியா (இந்தியன் நேஷனல் டெவலப்மெண்ட்டல் இன்க்ளூசிவ் அலையன்ஸ்) என்று பெயர் சூட்ட கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் இந்தியா கூட்டணியை வழி நடத்திச் செல்ல 11 பேர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். பிரசார மேலாண்மைக்கு பொதுவான ஒரு செயலகம் டெல்லியில் அமைக்கப்படும். அனைத்துக் கட்சிகளும் முக்கியமான பரிந்துரைகளை வழங்க வாய்ப்பு வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சீரழிக்கிறது. தன்னிச்சை அதிகாரம் பெற்ற சிபிஐ, அமலாக்கத்துறை, இலஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய தன்னிச்சை அதிகாரம் பெற்ற துறைகளை எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த தவறான வழிகளில் பயன்படுத்துகிறது ஒன்றிய பாஜக அரசு. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டும். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகள் கலந்து கொண்டன. பெங்களூருவில் நடந்த இந்த 2 ஆவது கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்துகொண்டன. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்ற நிலையில், பாஜக டெல்லியில் நடத்தும் கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்து கொள்வதாகக் கூறுகிறது. அவையெல்லாம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தானா? என்று தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததை கண்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார். பயப்படவில்லை என்றால் பாஜகவும் இதே நாளில் கூட்டம் கூட்ட வேண்டிய அவசியமில்லை. எனது 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக இந்தளவிற்கு மோசமான அடக்குமுறையை கையாண்ட ஆட்சியாளரைப் பார்த்ததில்லை. மக்கள் விரோத பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்து வெற்றி காண்போம். எங்கள் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேதி பிறகு அறிவிக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response