தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவர், 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறைஅமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 இலட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர்மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 2012 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கத் துறைக்கு தகவல் கிடைத்தது என்று சொல்லி, சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
13 மணி நேர சோதனைக்குப் பிறகு,சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பொன்முடியை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரித்தனர். விதிமுறைகளை மீறிசெம்மண் குவாரி உரிமம் வழங்கியது, பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. இரவு 8 மணிக்குத் தொடங்கிய விசாரணை, நேற்று அதிகாலை 3.30 மணி வரை நீடித்தது.
18 ஆம் தேதி (நேற்று) மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அளிக்கப்பட்டது. இந்த வழக்கு மற்றும் அந்நியச் செலாவணி முறைகேடு விவகாரத்தில் ஆஜராகுமாறு பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணிக்கும் அழைப்பாணை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் நேற்று மதியம் 3.50 மணிஅளவில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்துக்கு வந்தனர். பிரதான நுழைவுவாயில் முன்பு செய்தியாளர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், பின்பக்க நுழைவுவாயில் வழியாக அமலாக்கத் துறை அலுவலகத்துக்குச் சென்றனர். குடும்ப வழக்கறிஞரான விழுப்புரத்தை சேர்ந்த எட்வர்ட் ராஜாவும் சென்றார். ஆனால், விசாரணையின்போது உடன் இருக்க அவரை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மாலை 4 மணிக்குத் தொடங்கிய விசாரணை இரவு 10 மணி வரை நடந்தது.
விசாரணை முடிந்து அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தேசரி வெளியே வந்தார். அவர் ‘தினத்தந்தி’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை முடிந்துவிட்டது. கைது நடவடிக்கை இல்லை. மறு விசாரணைக்கான சம்மனும் வழங்கவில்லை. தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி இருக்கிறோம் என்று கூறிச் சென்றார்.
இந்நிலையில், அமலாக்கத் துறை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கனிமவளத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, அவரது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் செம்மண் குவாரி உரிமம் வழங்கியது தெரியவருகிறது. சட்ட விரோத செம்மண் குவாரி மூலம் கிடைக்கப்பெற்ற பல இலட்ச ரூபாய் பணம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பினாமிகள் பெயரிலான வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபுஅமீரகத்தில் உள்ள 2 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாகப் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தோனேசிய நிறுவனம் ரூ.41.57 இலட்சத்துக்கு வாங்கப்பட்டு, பின்னர் 2022 இல் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வெளிநாட்டு முதலீடுகள் நடந்தபோது, அதிகமதிப்பில் ஹவாலா பணமாக மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. ஆகியோர் தொடர்புடைய 7 இடங்களில் ஜூலை 17 ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.81.70 இலட்சம் கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
முறையாக விளக்கம் அளிக்கப்படாத ரூ.13 இலட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் (பிரிட்டிஷ் பவுண்டு) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் திசைதிருப்பும் விதமாக, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும்,அவர்களுக்குச் சொந்தமான மருத்துவமனை மூலம் கிடைக்கப்பெற்றது போன்று போலியான கணக்கு மற்றும் ஆவணங்களை தயாரித்ததும், அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடான கணக்கு விவரங்கள் அனைத்தும் வழக்கில் தொடர்புடைய ஒருவர் மூலம் பெறப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் கணக்கு விவரங்களுக்கு அவர்கள் சொல்லும் காரணம் நம்பத்தகுந்ததாக இல்லை.
சொத்துகள், நிறுவனங்கள் வாங்கியது, பிற நிறுவனங்களில் முதலீடு செய்தது சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் நடந்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்தக் குற்றச்செயலில் நேரடியாகத் தொடர்புடைய ரூ.41.90 கோடிமதிப்பிலான நிரந்தர வைப்புத் தொகை, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.