எடப்பாடி அதிமுகவில் பெரிதாகிறது சாதிச்சண்டை

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே எழுந்த மோதல் போக்கு தொடர்கிறது.இது சாதி ரீதியான சண்டையாக மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

எடப்பாடி அணியினர், அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வெளியேற்றியதாக அறிவித்ததைத் தொடர்ந்து அக்கட்சியில் முக்குலத்தோரைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

முக்குலத்தோர், அதிமுக இடையிலான உறவு, அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே நீடித்து வருகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்து கொடுத்த மாயத்தேவர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதனால் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு ஜெயலலிதா காலத்தில், சசிகலாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக முக்குலத்தோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

முக்குலத்தோர் அதிகம் இல்லாத சென்னை, கோவை மாவட்டங்களில் கூட அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், ஜெயலலிதா அமைச்சரவையில் எப்போது 6, 7க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முக்குலத்தோரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் 3 முறை முதல்வராக அமர வைக்கப்பட்டார். மேலும் ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். அந்த அளவுக்கு முக்குலத்தோருக்கு, ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அணியில், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான முக்கியத்துவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி பறித்து அவர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அந்தச் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் டெல்லி சென்று பாசக் தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது கூட, கவுண்டர் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மேலும் மூத்த அமைச்சர் என்பதால் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்காக இருப்பவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அவருக்கும் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. மேலும் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றவர்களையும் அழைத்துச் செல்லவில்லை.

இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தொடர்ந்து முக்குலத்தோர் புறக்கணிக்கப்படுவதாக அந்த சமூகத்தினர் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற புகார்கள், அவர் ஒற்றைத் தலைமை விவகாரத்தை கையில் எடுத்த போதே எழுந்தது. அப்போது, முக்குலத்தோர் சமூகத்தினரை ஆறுதல்படுத்தும் வகையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை, அந்தச் சமூகத்தில் செல்வாக்காக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு வழங்காமல் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு வழங்கினார். இதன் மூலம் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அந்தச் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் படிப்படியாகக் குறைத்து வருவதும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்குவதும் தொடர்கிறது.

எனவே,எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர்

இந்தச் சிக்கல் பெரிதாகி வருவதைச் சமாளிக்கும் வகையில் மதுரையில் மாநாடு நடத்த எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனாலும், கடும் அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோரைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்க்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Response