இந்திய அரசு செய்யும் குறையைப் போக்கும் மு.க.ஸ்டாலின் – பழ.நெடுமாறன் வரவேற்பு

புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி, மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன்,இலண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ.மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் புகழ்காந்தி ஆகியோர் அரசு சாரா உறுப்பினர்களாகவும், அரசு சார்ந்த உறுப்பினர்களாக – பொதுத் துறைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர்.நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர். வெளிநாடுவாழ் தமிழர் தொடர்பான பணிகளைக் கவனித்து வரும் அரசு சிறப்புச் செயலாளர்/அரசு இணைச் செயலாளர்/அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை; மேலாண்மை இயக்குநர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்,அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் ஆணையர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாரியத்தில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும்.

இவ்வாரியம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்திட ஏதுவாக, 5 கோடி ரூபாய் “வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி” என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல், மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழ்நாடு முதலமைச்சருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்ததோடு, அதற்குரிய தலைவர், வெளிநாட்டுத் தமிழர்களின் பிரதிநிதிகள், அரசு சார் அலுவலர்கள் ஆகியோரை நியமனம் செய்ததோடு, வெளிநாடு வாழ் தமிழர் நல நிதியும் ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

உலகில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.

இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, ரீயூனியன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்தும் இந்நாடுகளில்கூட இந்தியத் தூதுவர்களாகத் தமிழர்களை இந்திய அரசு நியமிப்பதில்லை.

இந்தக் குறையைப் போக்கும் வகையில் புலம்பெயர் தமிழர் நல வாரியமும், உலகத் தமிழ்ச் சங்கமும் செயல்பட்டு, அத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் உலகத் தமிழர்கள், தமிழக அரசின் இம்முயற்சியை வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response