ஈரோடு அருகே கனிராவுத்தர் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி டிசம்பர் 29. 2015 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் அசோக்குமார், இளநிலை பொறியாளர் பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு வீடுகளை இடித்தனர்.
இதையொட்டி, காவல் ஆய்வாளர்கள் விஜயன் (வீரப்பன்சத்திரம்), சிவக்குமார் (கருங்கல்பாளையம்) ஆகியோர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் நெடுமாறன் தலைமையிலான கனிராவுத்தர் குள மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன், நிர்வாகிகள் அப்பகுதிக்குச் சென்றனர்.
குளத்தைப் பார்வையிட்ட நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தக் குளத்தில் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், பெரிய கட்டடங்களை அகற்றாமல் குடிசை வீடுகளை அகற்றுவதால் பதற்றமான நிலை உள்ளது. இங்குள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அதை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்பகுதியில் குடியிருக்கும் குடிசைவாசிகள் கூறியதாவது:
கடந்த 40 ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ஆக்கிரமிப்பில் இருந்த 5 குடிசைகள் அகற்றப்பட்டன.