ஆழிப்பேரலையின் 11 ஆவது நினைவுநாளில் இயற்கைப் பேரிடர் விழிப்புணர்வு

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட ஆழிபேரலைப் பேரழிவின் 11ஆவது ஆண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்படும் நாளில் இந்த ஆழிப்பேரலை நினைவு தினத்தை, இனி ஆண்டுதோறும் இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக கடைபிடிக்கப் போவதாக யாழ்ப்பாணம் வடமாகாண சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானமும் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. டிசம்பர் 26. 2015 சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வுகளில் இறந்தவர்களையும் ஆழிப் பேரலையினால் அள்ளிச் சென்று காணாமல் போனவர்களையும் உறவினர்களும் மற்றவர்களும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

சுனாமிப் பேரழிவு இடம்பெற்று பதினோரு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் அண்மையில் சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளமும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் பெய்த பேய்மழை காரணமாக புதிய இடங்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்து அழிவு ஏற்பட்டதையும் அடுத்து, சுனாமி ஏற்பட்ட தினத்தை இயற்கைப் பேரிடர் தினமாகப் பிரகடனம் செய்வதன் மூலம் இயற்கைப் பேரழிவு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளாக, வடமாகாண சபையின் விவசாயத்துறை மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான அமைச்சர் ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

“இயற்கைப் பேரழிவுகளான ஆழிப் பேரலையையும் பெரும் வெள்ளத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. எனினும் அதனால் ஏற்படுகின்ற பேரிடர்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள முடியும்” என்றார் ஐங்கரநேசன்.

இவ்வாறான முன் முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மனிதப் பேரழிவுகளைக் குறைத்துக் கொள்ள அல்லது தவிரத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அத்தகைய முயற்சிகள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதுமே இந்த இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினத்தின் முக்கிய நோக்கமாகும் என்றார் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன்.

இந்தப் பேரழிவில் கணவன் மற்றும் தாயார் சகோதரர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்களை இழந்த வரப்பிரகாசம் விஜயரஜினி தனக்கு நேர்ந்த இழப்பு மற்றும் அவருடைய வாழ்க்கை குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசினார்.

அந்த இயற்கைப் பேரிடரை தன்னால் உயிருள்ளவரையில் மறக்க முடியாதது என்றும் கண்முன்னால் பல உயிர்களைக் கவர்ந்து சென்ற அந்த அவலமான அனுபவம் தன்னைப் போன்றவர்களை வாழ்நாள் முழுக்க அலைக்கழிப்பதாகவும் அவர் கூறினார்.

“சுனாமி பேரழிவில் இழந்த பொருள் இழப்பை ஈடு செய்து கொள்ளலாம். ஆயினும் அதில் அழிந்து போன உயிர்களை மீட்டுக் கொள்வதென்பது இயலாத காரியம். அதுவே அந்தப் பேரிடர் விளைவித்த பெருந்துயரம்” என்றார் விஜயரஜினி.

Leave a Response