2016 சனவரி 29 ஆம் தேதி, 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம்- சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி முத்துக்குமார் நினைவை போற்றும் வீரவணக்க நாளில், 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நிறுத்த இருக்கிறோம்.

எங்களை பொறுத்தவரையில், தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எதிராக நடக்கும் போராக தான் இந்த தேர்தலை நாங்கள் கருதுகிறோம். தமிழகத்தில் அடிப்படை, அமைப்பு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுடைய ஆசையாக இருக்கிறது.

வீரவிளையாட்டான கபடி, சிலம்பம் வரிசையில் முதன்மையாக இருப்பது ஜல்லிக்கட்டு ஆகும். தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது தேவையற்ற செயல். காளையை வனவிலங்குகளில் சேர்த்தது தவறு. அது ஒரு வீட்டு விலங்கு தான். ஜல்லிக்கட்டில் விடப்படும் காளைகளை நாங்கள் வதைக்கிறோம் என்று சொல்வதை நாங்கள் எதிர்க்கிறோம். அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை என்பது தமிழர்களின் அடையாளத்தையும், தொன்மையையும் அழித்து சிதைப்பதற்கு நடக்கும் திட்டமிட்ட சதி. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் உடனே இயற்றப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் தடையை மீறி வீரத்தமிழர் முன்னணி ஜல்லிக்கட்டு நடத்தும்.

எங்களிடம் 300 காளைகள் இருக்கின்றன. இடத்தை விரைவில் தேர்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் காளைகளை நேசிக்கிறோம். அதனால் தான் அதனுடன் விளையாடுகிறோம். மேலும் காளைகளை குலதெய்வமாக நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

Leave a Response