சீனாவின் திட்டப்படி மாலத்தீவு தப்பியோடிய கோத்தபய – அங்கும் போராட்டம்

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லம் ஆகியனவற்றைப் போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், தலைமறைவான கோத்தபய ராஜபக்சே, ஜூலை 13 ஆம் தேதி பதவி விலகுவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் பதவி விலகத் தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனாலும், கோத்தபய முறைப்படி பதவி விலகிய பிறகுதான் புதிய அரசு பொறுப்பேற்க முடியும். அதுவரை பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

அதே சமயம், அனைத்துக் கட்சிகள் கூடி, கோத்தபய பதவி விலகினால், வரும் 20 ஆம் தேதி புதிய அதிபரைத் தேர்வு செய்வதென முடிவு செய்தன.

இந்நிலையில், அதிபர் பதவியை நேற்று ராஜினாமா செய்ய வேண்டிய கோத்தபய ராஜபக்சே, அதிகாலையில் தனது குடும்பத்துடன் விமானப்படை விமானம் மூலமாக மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார். இதை பிரதமர் அலுவலகமும் உறுதி செய்தது.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையே, இலங்கை அரசியலமைப்புச் சட்டம் 37(1)ன்படி, பொறுப்பு அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தனா அறிவித்தார்.

அதோடு, வன்முறையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாகவும், வன்முறையில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்யவும் இராணுவத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு எப்படி தப்பிச் சென்றார், மாலத்தீவில் அவருக்கு ஆதரவு அளிப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால், புதிய அரசால் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாகத்தான் அவர் பதவி விலகும் முன்பாகவே நாட்டிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். முதலில் அமெரிக்காவில் தஞ்சமடைவதே அவரின் திட்டமாக இருந்தது. ஆனால், அமெரிக்க விசா அவருக்கு மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலத்தீவைத் தொடர்பு கொண்டுள்ளார்.

மாலத்தீவின் முன்னாள் அதிபரும், தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத், ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பவர். 2012 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து நஷீத் வெளியேற்றப்பட்ட போது, மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த இலங்கையில் தான் அவர் தஞ்சமடைந்தார். அந்த விசுவாசத்தில் தற்போது கோத்தபயவுக்கு அவர் ஆதரவு தந்துள்ளார்.

முதலில் கோத்தபய சென்ற இலங்கை விமானப்படை விமானம் மாலேவின் வெலானா விமான நிலையத்தில் தரையிறங்க மாலத்தீவு விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி தரவில்லை. பின்னர், சபாநாயகர் நஷீத் தனிப்பட்ட முறையில் பேசிய பிறகே, கோத்தபய சென்ற விமானம் தரை இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோத்தபயவுடன் அவரது மனைவி மற்றும் பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஏஎன்32 விமானம் அதிகாலை 3 மணி அளவில் மாலேவைச் சென்றடைந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோத்தபய இரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாலத்தீவில் கோத்தபய தங்க மாட்டார், அவர் வேறொரு இடத்திற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இலங்கையைப் போல மாலத்தீவும் சீனாவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட நாடாக இருந்து வருகிறது. இதனால், சீனாவின் திட்டப்படி கோத்தபய மாலத்தீவில் தஞ்சமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மாலத்தீவிலும் விரட்டும் மக்கள்; மாலத்தீவில் கோத்தபய தஞ்சமடைந்துள்ள தகவல் பரவியதும், அந்நாட்டின் தலைநகர் மாலியில் உள்ள அதிபர் மாளிகை முன்பாக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். ‘கோ கோத்தபய’ மற்றும் ‘குற்றவாளிகளுக்கு ஆதரவு தர வேண்டாம்’ என அவர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால், மாலத்தீவு அரசுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Response