இன்று முதல் இவற்றை விற்றால் 1 இலட்சம் அபராதம் – ஒன்றிய அரசு அதிரடி

இந்திய ஒன்றியம் முழுவதும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய ஞெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிகக் குப்பையை ஏற்படுத்தக்கூடிய ஞெகிழிப் பொருளின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை செய்யப்படும்.

தடை செய்யப்பட்ட ஞெகிழிப் பொருட்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டாம் என ஒன்றிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோல ஒருமுறை பயன்படுத்தும் ஞெகிழிப் பொருட்களை விற்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் புதிய வணிக உரிமங்களை வழங்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட ஞெகிழிப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கண்டறியப்பட்டால் வணிக உரிமங்கள் இரத்து செய்யப்படும். தடையை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1 இலட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்திய ஒன்றியத்தில் 2019-20 ஆம் ஆண்டில் 34 இலட்சம் டன்களுக்கும் அதிகமான ஞெகிழிக் கழிவுகள் உருவாகியுள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் அபாயகரமான புகை மற்றும் வாயுக்களை வெளியிடுவதால் இவற்றை எரிக்க முடியாது. எனவே, மறுசுழற்சி தவிர ஞெகிழிப் பொருட்களை சேமிப்பது மட்டுமே சாத்தியமான தீர்வாக உள்ளது. இந்தத் தடை ஞெகிழிக் கழிவைக் குறைக்க பெரிதும் உதவும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய ஞெகிழிப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சோதனைச்சாவடிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்கள்:-

பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி
பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி
பிளாஸ்டிக் குச்சி
பிளாஸ்டிக் கொடி
மிட்டாயில் இருக்கும் பிளாஸ்டிக் குச்சி
ஐஸ்கிரீம் குச்சி
அலங்கார வேலைகளுக்கான தெர்மகோல்
சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி
அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றைச் சுற்றிக் கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள்
பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள்

Leave a Response