1 முதல் 12 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பு விவரம் – அமைச்சர் அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் சற்று தாமதமாக தொடங்கின. இதில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நிறைவு பெற்று, கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வருகிற 28 ஆம் தேதி 12 ஆம் வகுப்புக்கும், 31 ஆம் தேதி 11 ஆம் வகுப்புக்கும், 30 ஆம் தேதி 10 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நிறைவு பெற உள்ளது.

இந்த நிலையில், 2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? தேர்வு எப்போது நடைபெறும்? என்பது தொடர்பான அட்டவணையையும், 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்ட அட்டவணையையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.

மேலும், மாணவர்கள், பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள், மின்பதிவேடுகள், ஆசிரியர்கள் இணையவழியில் பணிப்பலன்களை பெறுவதற்கான செயலியையும் தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு(பிளஸ்-2) மாணவர்களுக்கு ஜூன் 20 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு (பிளஸ்-1) மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.

இந்தக் கல்வியாண்டில் கொரோனாவுக்கு முந்தைய காலங்களில் எப்படி வகுப்புகள் நடந்ததோ? அதே போன்று வகுப்புகள் நடத்தப்படும். 10 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தேர்வில் சில வினாக்கள் பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாகவும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இல்லாத சில வினாக்கள் இடம்பெற்றதாகவும் புகார் கூறியிருக்கிறார்கள். தோல்வி அடைந்துவிடுவோமா? மதிப்பெண் குறைந்துவிடுமோ? என்று பயப்படலாம். அந்த மாதிரி பயப்படக்கூடிய நிலை வேண்டாம். கருணை மதிப்பெண் என்பது பாடத்திட்டத்தில் இல்லாத வினாக்கள் கேட்கப்பட்டால்தான் வழங்கப்படும். அந்தவகையில் பாடத்திட்டத்தில் இல்லாமல், குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து வினாக்கள் அமையாமல் இருந்தால் கருணை மதிப்பெண் வழங்கப்படும். அதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்பூர்வமான போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தைகளைக் குழப்பக்கூடாது என்ற வகையில், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஹைடெக் லேப் மூலம் வழங்கி வருகிறோம். இந்த ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி மாணவர்கள் உள்பட 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். எனவே இந்தப் பயிற்சி வகுப்பை நிறுத்தப்போவது இல்லை. அதைத் தனியாகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எப்படி வழங்க முடியுமோ அவ்வாறு வழங்குவோம்.

இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில்தான் தேர்வுக்கு வராதவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 12 ஆம் வகுப்பைப் பொறுத்தவரையில், கடந்த 4 ஆண்டுகளாக 34 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வு எழுதாமல் இருந்தனர். இந்த ஆண்டு 31 ஆயிரத்து 600 பேர்தான் தேர்வு எழுத வரவில்லை.

இதேபோல், 10 ஆம் வகுப்பை எடுத்துக்கொண்டால், 21 ஆயிரத்தில் இருந்து 24 ஆயிரம் வரையில் கடந்த ஆண்டுகளில் இருந்தது. இந்த ஆண்டு அது 2 மடங்கு அதிகரித்து 46 ஆயிரத்து 800 பேர் தேர்வு எழுத வராதது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஜூலை மற்றும் செப்டம்பரில் துணை பொதுத்தேர்வு நடத்துவோம். இந்தத் தேர்வுக்கு வராதவர்களை அதில் எழுத வைப்போம்.

கொரோனா காலகட்டத்தில் இடைநின்ற 1 இலட்சத்து 90 ஆயிரம் மாணவ-மாணவிகளை மீண்டும் எப்படி பள்ளிக்கு அழைத்து வந்தோமோ? அதேபோல், பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் நிலை என்ன? எதனால் வரவில்லை? என ஆராய்ந்து அவர்களை உத்வேகப்படுத்தி மீண்டும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான விவகாரத்தில் வேண்டுகோளாக அவர்களுக்கு வைக்கிறேன். குழந்தைகளுக்குப் படிப்பு வழங்க வேண்டும் என்ற ஆசையில் கல்வி நிறுவனத்தை நடத்தும் நீங்கள், கல்விக் கட்டணம் செலுத்தினால்தான் மாற்றுச்சான்றிதழ் தருவேன். கட்டணம் கொடுத்தால்தான் பள்ளியில் சேர்ப்பேன், அடுத்த வகுப்புக்கு அனுப்புவேன் என்று சொல்லாதீர்கள். பெற்றோரை அழைத்து அவர்களின் பொருளாதாரச் சூழலைப் பார்த்து எப்போது தருவீர்கள் என்று பேசுங்கள். கை மீறி போகும்போதுதான் தனியார் பள்ளிகளை எச்சரிக்க வேண்டிய சூழல் வருகிறது.

காலை சிற்றுண்டித் திட்டம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதலமைச்சர் இதற்கான தேதி சொல்வார். அன்றைய தினம் இதைத் தொடங்கி வைத்து தங்கு தடையின்றி தொடர்ந்து வழங்குவோம். காலை 8.30 மணிக்கு உணவு வழங்கப்பட்டு, மாணவர்கள் 9 மணிக்கு வகுப்பறைக்கு செல்வதற்கு ஏற்றவாறு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response