மே 18 தமிழினப்படுகொலை நாள் – நெஞ்சம் நடுங்க வைக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி

தமிழினப் படுகொலை நாளான மே-18 ஐ நினைவுகூரும் முகமாக ஆண்டுதோறும் மே-12 இல் இருந்து 18 வரையான ஒருவார காலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகத் தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள அதன் தலைமைப் பணிமனையின் முன்பாக நேற்று நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் நினைவுச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உணவின்றித் தவித்த மக்களுக்கு விடுதலைப் புலிகளினாலும், பொது அமைப்புகளினாலும் தயாரித்து வழங்கப்பட்ட உப்புக் கஞ்சியே ஒரேயொரு உயிர் ஆகாரமாக இருந்து வந்தது.

இதனால், எமது எதிர்கால சந்ததிகளுக்குப் போரின் வலியையும் தமிழினம் பட்ட வதையையும் எடுத்துச்சொல்லும் விதமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்படுகிறது.

பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் ம.கஜேந்திரன், துணைப் பொதுச்செயலாளர் சண்.தயாளன், பொருளாளர் க.கேதீஸ்வரநாதன், உபதலைவர் ந.காராளசிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் ஆகியோருடன் பெருமளவில் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

கஞ்சியைப் பார்த்தவுடன் அன்றைய நாள் நினைவில் வந்ததென நடுக்கத்துடன் பலர் சொல்லக் கேட்க முடிந்தது.

Leave a Response