தமிழ் தெரியாத 450 பேர் தமிழகவங்கிகளில் எழுத்தர் வேலைக்குத் தேர்வு – தடுத்து நிறுத்தக் கோரிக்கை

வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் நடத்தும் வங்கிகளுக்கான எழுத்தர் பணிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்று அறிவித்தான் மூலம், தமிழக மாணவர்களுக்கு வாய்ப்புகள் பறி போகும் நிலை உருவாகியுள்ளதாக அனைத்திந்திய ஒபிசி வங்கிப் பணியாளர்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதன் செயலாளர் ஜி.கருணாநிதி தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது….,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளைப் படிக்க, எழுத, பேச வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ்நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்தது.

இந்நிலையில், வங்கித் தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (IBPS) கடந்த சில ஆண்டுகளாக வெளியிடும் விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே (Not mandatory; it is preferable) என்று விளம்பரப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக வேறு மாநிலங்களில் உள்ளோர் தமிழ் நாட்டில் தேர்வு எழுதி, கிளார்க் பணிகளிலும் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது 2022-23 ஆண்டுக்கான கிளார்க் பதவி நியமனங்களுக்கு தேர்வுகள் நடைபெற்று 843 பேர் கிளார்க் பதவிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

பாங்க் ஆப் இந்தியா (21), கனரா வங்கி (90), இந்தியன் வங்கி (555) பஞ்சாப் & சிந்த் வங்கி (5), யூகோ வங்கி (5), யூனியன் பாங்க் ஆப் இந்தியா (147) ஆகிய அரசு வங்கிகளில் மொத்தம் 843 கிளார்க்குகள் பணியில் சேர உள்ளனர்.

ஏழு அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் 843 பேர் கிளார்க்குகளாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் இந்த ஆண்டு வெளி மாநிலத்தவர்கள் மிக அதிக அளவில், ஏறத்தாழ, 50 சதவீதத்திற்கு அதிகமாக, அதாவது, 843 பேரில் 400-க்கும் அதிகமாக வெளி மாநிலத்தவர், தமிழ் மொழி தெரியாமல் பணியில் சேர உள்ளனர் என்பதாக தகவல் வருகின்றன.

வங்கிகளில் கிளார்க் பணி புரிவோர் வாடிக்கையாளரிடம் நேரடித் தொடர்புடையவர்கள். குறிப்பாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இவர்களின் சேவை மாநில மொழியில் இருப்பது அவசியம்.

ஆனால், வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (தனியார் நிறுவனம்) நடத்தும் தேர்வு மூலமாக தமிழ் தெரியாதவர்கள், பெரும்பாலும் ஒடிசா, கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கிளார்க் பணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி பேச, எழுத, படிக்கத் தெரியாது.

ஆகவே, இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டும்.வங்கிப் பணியாளர் தேர்வுக்கழகம் நடத்திய தேர்வின் மூலம் தேர்வு பெற்ற, தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கே பணி வழங்கப்பட வேண்டும் என்று முத்தைய ஆண்டில் எமது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு எழுதிய கடிதங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பத்திய அரசின் நிதித்துறையில் ஒரு அங்கமாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நேஷனல் இன்ஸூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸூஸூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் போன்ற அரசு காப்பீட்டு நிறுவனங்களில், கிளார்க் பணிகளில் சேருவதற்கு, அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற விதி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் குறிப்பாக கிளார்க் பணிகளுக்கு, இந்த விதி தளர்த்தப்பட்டதால், மொழி தெரியாதவர்களும், கிளார்க் பணிக்கு சேரும் நிலை ஏற்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

வங்கித் தேர்வு நடத்தும் நிறுவனம் கிளார்க் பணிக்கு, மாநில மொழி அறிவு கட்டாயம் என ஏற்கனவே இருந்த விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

இப்பிரச்சினை குறித்து, மத்திய அரசின் நிதி அமைச்சர் மற்றும் வங்கித் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட தாங்கள் ஆவண செய்திட வேண்டுகிறோம்.

இவ்வாறு, அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response