கடலூர் மக்களுக்கு சுவிஸ் தமிழர்கள் உதவி, கடல் பிரித்தாலும் தமிழ் இணைக்கும் கண்ணீர்க்காட்சி

மழை கவிழ்ந்து மனித நேயம் தலை நிமிர்ந்திருக்கிறது.
சுவிசர்லாந்து வாழ் தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று இயக்குநர்
வ.கெளதமன் க்குறியிருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவு…

பெருமழையாலும் பெரும் வெள்ளத்தாலும் தத்தளித்த தமிழ் நாட்டு உறவுகளுக்கு அன்புக்கரம் நீட்டி ஆதரவு தந்த சுவிசர்லாந்து நாட்டின் சூரிச் நகரிலிருக்கும் அருள்மிகு சிவன் கோயில் (சைவத்தமிழ்ச்சங்கம்) பக்தர்களான பேரன்பும் பெரும் பாசமும் கொண்ட எனது உயிருக்கு நிகரான தாய்த்தமிழ் உறவுகளுக்கு தமிழ்நாட்டின் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த பூமிப்பந்தின் மூத்த இனம் தமிழினம். இயற்கையாலும் செயற்கையாலும் நினைத்து பார்க்க முடியாத பேரழிவுகளை
காலம் காலமாக சந்தித்திருந்த போதிலும் சமீபத்தில் பெய்த கனமழையாலும் பெரும் வெள்ளத்தாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பகுதிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டன. அதுவும் கடலூர் மாவட்டம் தானே புயலில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு பேரழிவில் சிக்கி அதன் பேரழகு முற்றிலுமாக சிதைந்துவிட்டது.
நடந்து முடிந்த சோகங்களில் பெரும் மன ஆறுதலாக அமைந்தது ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் துணையாகவும், தோள் கொடுத்தும்தான். இன்றும் கூட அரசுகள் தங்களது கடமைகளை சரிவர செய்து முடிக்காத நிலையில் ஆபத்துகள் தொடங்கிய நிலையிலிருந்தே மாணவர்களும், இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக புறப்பட்டு மகத்தான சேவையை இந்த மண்ணில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வானமே கிழிந்து அருவியாக கொட்டிக்கொண்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட நான்கைந்து நாட்கள் யாரையும் யாரும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் புலம்பெயர் உறவுகள் தவித்த தவிப்பு, அடைந்த சோகம் அதன்பின் கிடைத்த அலைவரிசை மூலமாக பகிர்ந்து கொண்ட போது உண்மையில் தாய்த்தமிழ் மண் மெய்சிலிர்த்தது. காலில் அடிபட்டால் நெஞ்சு வலிக்கும் என்பதை தமிழினம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்கொண்டது.

நானும் எனது உயிர் நண்பர் த.மணிவண்ணன் அவர்களும் முடிந்தவரை பொருட்கள் சேகரித்து முதல்முறையாக கும்முடிப்பூண்டி முகாமில் வசித்து வரும் நமது தமிழீழ உறவுகளுக்குத்தான் நிவாரணம் வழங்கினோம். எந்தவொரு சூழலிலும் இந்த ஆதி இனம் எங்கோ ஒரு இடத்தில் தவித்தால், இந்த பூமிப்பந்தில் எங்கேயிருந்தாலும் வேடிக்கைப்பார்க்காது ஓடேடி வந்து உதவும் என்பதற்கு உதாரணம்தான் சுவிசர்லாந்து வாழ் உறவுகள் செய்த உதவியும் அதனை தொடர்ந்து நமது தமிழீழ உறவுகள் சேகரித்து வரும் நிதியும் என்பதனை அறியும் போது நெஞ்சம் நிறைந்து நெகிழ்வடைகிறது.

அருள்மிகு சிவன்கோவில் பக்தர்கள் தந்த உதவிகளை கடலூர் மாவட்ட தியாகவல்லி ஊரிலும் நம் பாசத்திற்குரிய தாழ்த்தப்படுத்தப்பட்ட உறவுகள் வாழும் லெனின் நகர், தம்பிப்பேட்டை ரெங்கநாதபுரம் போன்ற பகுதியிலும் உள்ள ஐநூருக்கும் மேற்ப்பட்ட வீடுகளுக்கு அரிசி, துவரம்பருப்பு, எண்ணைய், ரவை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களாக கொடுக்கப்பட்டன. இந்த நூற்றாண்டில் நம் இனம் சந்தித்த மிகப்பெரும் இரண்டு சிதைவுகள் ஒன்று முள்ளிவாய்க்கால், மற்றொன்று நூற்றி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பெய்த இந்த பெருமழை. இந்த உலகில் யாருக்கு இருக்கிறதோ இல்லையோ விழவிழ எழுந்த வலிமையும், வரலாறும் நமக்கு மட்டுமே சொந்தமாகியிருக்கிறது.

என் உயிருக்கு நிகரான உறவுகளிடம் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் வைக்கிறேன்.
“நீ உன் தட்டில் கை வைக்கும்முன் பக்கத்து வீட்டில் இருக்கும் உன் சகோதரன் பசியாறினானா என்று பார்த்து விட்டு வந்து பசியாறு” என்பதுதான்.
ஒன்றாக நிற்ப்போம். உறுதியாக வெல்வொம்.
பேரன்போடு,
வ. கெளதமன்.

Leave a Response