தமிழீழ நிலப்பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிங்கள மயமாக்கும் முயற்சியில் இராஜபக்சேகளின் அரசு தீவிரம் காட்டி வருகிறது.அதன் தொடர்ச்சியாக, மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் பேசும் சமூகத்தின் பூர்விக நிலப்பரப்பு இல்லை என்பதை நிறுவும் தீவிர முயற்சியில் கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஈடுபட தொடங்கி இருக்கின்றது.
அதுபற்றிய விவரம்…..
கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டு வரும் கிழக்கு தொல்பொருள் செயலணியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ, மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை (தொப்பிகல) பகுதியில் அனுராதபுர காலத்திற்குரிய 16 பௌத்த மத அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்/
அதாவது பௌத்த மதத்தைப் பிரதிபலிக்கும் கல்வெட்டுகள் சிறிய தூபி, புராதன கட்டிடம், புராதன கற்கள் மற்றும் சேதமடைந்துள்ள சிலையும் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்/
ஆனால் வரலாற்று ஆய்வாளரான என்.கே.எஸ்.திருச்செல்வம் போன்றோர் 2, 000 வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலேயே குடும்பிமலை (தொப்பிகல) பகுதியில் சிவ வழிபாடு செழிப்புடன் விளங்கியதை உறுதி செய்கின்றார்கள்.
அதே போல இப் அப்பகுதியில் சிவ வழிபாடு சம்பந்தமான பிராமிக் கல்வெட்டுக்கள் இப்பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதையும் ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள்.
குறிப்பாக இப்பகுதியில் உள்ள குகையொன்றில் “சிவனைக் குலதெய்வமாக வழிபடும் கஹபதி யின் குகை” எனும் பொருளில் கல்வெட்டு ஒன்று காணப்படுவதை அடையாளப்படுத்தி இருக்கின்றார்கள்.
இது மட்டுமின்றி இப் பகுதிக்கு அண்மையாக சிவன் பற்றிய மேலும் இரு பிராமிக் கல்வெட்டுகள் இருப்பது பற்றியும் அதில் ஒன்றில் “சிவனின் புத்திரன் கமிக” என்ற வாசகமும், மற்றைய கல்வெட்டில் “ சிவனின் குகை” என்ற பொருளிலும் எழுத்துகள் காணப்படுகிறன என்பதையும் ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள்.
இக் குகைக் கல்வெட்டுகள் மூலம் இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் ஆதித்தமிழர்கள் எனவும் சிவ வழிபாட்டைப் பின்பற்றியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கின்றார்கள்.
ஆனால் எல்லால மேதானந்த தேரர் தலைமையிலான கிழக்கு தொல்பொருள் செயலணி தமிழ் மக்களின் பூர்விகம் தொடர்பான வரலாற்று உண்மைகளை மறைத்து மட்டக்களப்பு மாவட்டத்தை இலக்கு வைத்து பௌத்த மத ஆதிக்கத்தை நிறுவும் வேலைகளைச் செய்து வருகின்றார்கள்.
குறிப்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவ போன்றோர் தேவநம்பிய தீசன் காலத்திற்கு முன்னரே இலங்கையில் பௌத்த மதம் வேரூன்றி இருந்தது என்பதை நிரூபிக்க முயற்சி செய்கின்றார்கள்.
மஹிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 பௌத்த மத அடையாளங்கள் இருந்ததாக தொல்லியல் திணைக்களம் ஊடாக அடையாளப்படுத்தி இருந்தார்கள்.
ஆனால் கோட்டாபய ராஜபக்சே ஆட்சியில் நிறுவப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் தலைவர் எல்லால மேதானந்த தேரர் 2,000 மேற்பட்ட பௌத்த மத அடையாளங்கள் கிழக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தி இருப்பதாகச் சொல்லி வருகின்றார்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 600 இற்கு மேற்பட்ட இடங்களில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தாமலை ஆலயம் , சித்தாண்டி முருகன் ஆலயம், கச்சக்கொடி சுவாமிமலை, குசேலன் மலை போன்ற சைவ ஆலயச் சூழல்களில் கூட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக உரிமை கோரி வருகின்றார்கள்.
அதே போல வாகனேரி, பன்குடாவெளி,வேற்றுச்சேனை , மட்டக்களப்பு நகரம், செங்கலடி, புலுக்குணாவா,பொண்டுகள்சேனை, போன்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் பரந்துபட்ட நிலப்பரப்பு எங்கும் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் உரிமை கோருகின்றார்கள்.
கிழக்கு மாகாண தொல்லியல் திணைக்களம் ஊடக பௌத்த மத அரசியலை நிலை நிறுத்த முயற்சி செய்யும் சம நேரத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஊடாக சிங்கள கிராமங்களை மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கும் வேலைகளையும் மாவட்ட எல்லைகளில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி அவர்களுக்கு வீட்டுத் திட்டங்களை பெற்றுக் கொடுக்கும் வேலைகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செய்து வருகின்றார்.
அந்த வகையில் திவுலபொத்தான ஒரு சிங்கள கிராமத்தை மட்டக்களப்பு மாவட்ட நிருவாக அலகிற்குள் உள்வாங்கும் அழுத்தத்தை பலவேறு நிர்வாக மட்டங்களில் ஆளுநர் செய்து வருகின்றார்.
இதே போன்ற நடைமுறையைத் தான் கடந்த காலங்களில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் செய்தார்கள்.
குறிப்பாக பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்குரிய பதியத்தலாவ மற்றும் தெஹியத்தகண்டிய சிங்கள பிரதேச செயலகங்களை அம்பாறை மாவட்டத்தின் நிர்வாக அலகிற்குள் உள்வாங்கி அம்பாறை மாவட்டத்தை முழுமையான சிங்கள மாவட்டமாக உருவாக்கி இருந்தார்கள்.
இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்ட 1 சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்குப் பதிலாக தற்போது 4 சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு வரும் சூழலை உருவாக்கி இருக்கின்றார்கள்.
மேற்குறித்த நடைமுறையைத் தான் தற்போது மட்டக்களப்பிலும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றார்கள்.
இது போதாதென்று மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பகுதியில் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை மீறி இந்த ஆண்டுக்கான பெரும்போக விவசாயத்திற்கு சிங்கள விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஊடாக அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
அதே போல கெவிலியமடு பகுதியில் வன இலாகாவிற்குச் சொந்தமான காணியில் மரமுந்திரிகை செய்கையில் ஈடுபட சிங்கள ஊர்க்காவல் படையினருக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதே போன்று கித்துள் பிரதேச மேச்சல் தரை காணியை இலங்கை இராணுவத்தின் சூட்டுப் பயிற்சிக்காக வழங்கி இருக்கின்றார்கள்.
இவை வெறும் சான்றுகள் மட்டுமே.
இதைப் போன்று ஊடகங்கள் பேசாத பல நூறு விடயங்கள் நடைபெற்று வருகின்றன.கேட்பதற்கு யாருமே இல்லை.
உண்மையில இராஜபக்சே சகோதாரர்கள் தங்கள் முகாமில் உள்ள தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களையும் முஸ்லீம் அரசியல்வாதிகளையும் நேர் எதிர் திசைகளில் நிறுத்தி வெறுப்பு அரசியல் செய்து வருகிறார்கள்.
மறுபுறம் தமிழ் பேசும் சமூகத்தின் பூர்விக நிலங்களை ஆக்கிரமித்து பௌத்த மத அடையாளங்களை நிறுவி தமிழ் மக்களின் பூர்விக நிலங்களை சிதைக்கும் வேலைகளை கொரனோ பெரும் தொற்றுக் காலத்திலும் எந்தத் தயக்கமும் இன்றி செய்து வருகின்றார்கள்.