டெல்லிவரை சென்றும் வேலை நடக்கவில்லை – எடப்பாடி பழனிச்சாமியை நெருங்கும் ஆபத்து

முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விசுவரூபம் எடுத்து வருகிறது.

இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக உதகை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தெரிவித்திருந்தார். இந்தத் தனிப்படை கோடநாடு கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாகவே காவல்துறை இந்த கொடநாடு வழக்கு தொடர்பாக விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் சயான் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.

இந்த வழக்கின் சாட்சியாகக் கருதப்படும் அதிமுகவைச் சேர்ந்த அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய முழு அனுமதி உள்ளது என்று தெரிவித்திருந்தது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.

கொடநாடு வழக்கின் மேல் விசாரணைக்குத் தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேல்விசாரணை நடத்தப்படுவதாகவும் மேல்விசாரணை நடத்திக்கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவில்லாமல் தான் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. கொடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் இருக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது, வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. தற்போதைய சூழலில் மேல் விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.வழக்கின் தேவை இருப்பின் மேல் விசாரணை நடத்துவதில் என்ன பிரச்சனை? கொடநாடு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் எனக் கூறி அனுபவ் ரவியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றம் வரை சென்றும் கொடநாடு வழக்கு விசாரணைக்குத் தடை பெற முடியவில்லை. இதனால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆபத்து நெருங்குகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response