இன்று ஆடி 18 எனும் ஆற்றுப்பெருக்கு நாள் – வெறிச்சோடிக் கிடக்கும் பவானி கூடுதுறை

இன்று ஆடிப்பெருக்கு நாள். ஆடி மாதம் 18 ஆம் நாளான இன்று தென்மேற்குப் பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.

இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையைத் தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவில் மங்களம் பெருக, சகல செல்வங்களும் பெருக, வேளாண்மை செழிக்க, உழவர் செழிக்க காவிரியைத் தாயாக நினைத்து வழிபடுவார்கள். புதுமணத் தம்பதிகள் திருமணத்தன்று அணிந்திருந்த மாலைகளை காவிரிக்குச் சமர்ப்பித்து, வழிபாடு செய்து, தாலியைப் பெருக்கி அணிந்து கொள்வார்கள்.

காவிரிக் கரையோர மாவட்டங்களில் ஆடிப் பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும்.பாவனி கூடுதுறை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் ஆடிப் பெருக்கு விழாவின் போது மக்கள் பெருமளவில் கூடி வழிபாடு நடத்துவார்கள்.

கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் காரணமாக, காவிரி ஆற்றின் கரைகளில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கு, இரண்டாவது ஆண்டாக அனுமதி இல்லை. காவிரிக் கரை ஓரங்களில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்துள்ளனர். மாலையுடன் வரும் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்டோர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, பாவனி கூடுதுறை, திருச்சி அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை உள்ளிட்ட காவிரிக்கரைகள் மக்களின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

Leave a Response