வறுமையில் வாடும் மறைமலை அடிகளார் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு பேருதவி

தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“உயர்தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழிக் கலப்பின்றி தூய நடையில் எழுதியவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவரும், சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர் தம் உள்ளங்களில் நீங்காத இடம்பெற்ற தமிழறிஞருமான மறைமலை அடிகளைப் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

அத்தகைய சான்றாண்மை மிக்க மறைமலை அடிகளார் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டைச் சிறப்பித்துப் போற்றும் வகையில், கடந்த 1997ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்ச கலைஞர், ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலாவாக தமிழ்வானில் ஒளிவிட்டவரும், நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனச் சீறியெழுந்த செந்நாப்புலவருமான செந்தமிழ் வித்தகர், இனமான ஏந்தல் தமிழறிஞர் மறைமலை அடிகளார் தமிழுக்கு அளித்துள்ள படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கவும், அவரது குடும்பத்தினருக்குக் காப்பு நிதி வழங்கவும் ரூபாய் இருபது லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்’ என அறிவித்து, தமிழுக்கும், மறைமலை அடிகளாருக்கும் சிறப்பு செய்தது இத்தருணத்தில் நினைவுகூரத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் இளைய புதல்வர் மறை பச்சையப்பன், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதையும், அவர் குடியிருக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வாடகைக் குடியிருப்புக்குப் பராமரிப்புக் கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்த இயலாத நிலையில் உள்ளதையும் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மறை பச்சையப்பன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய பராமரிப்புக் கட்டண நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்தும், வாழ்நாள் முழுவதும் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் ஆணையிட்டுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், மறை பச்சையப்பனின் மகன் ப.சிவகுமார் தற்போது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் தற்காலிக அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருவதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பு நேர்வாக அவரது பணியை நிரந்தரம் செய்திடவும் ஆணையிட்டுள்ளார்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response