யாழ்ப்பாணம் செம்மணியில், மாவீரர்களை வணங்கும் மரம் நடுவிழா தொடக்கம்

தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை ஒரு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. வீடுகள்தோறும் விளக்கேற்றி வழிபடும் திருநாள் இம்மாதத்திலேயே அடங்குகிறது. மழைத்தண்ணீரால் நனையும் மாதமாக மாத்திரம் அல்லாமல் தமிழ் மக்களின் கண்ணீரால் நனையும் மாதமாகவும் கார்த்திகை உள்ளது. போரில் உயிர் துறந்த மாவீரர்களின் கூட்டு நினைவாகத் தமிழ் மக்கள் கண்ணீர் உகுக்கும் நாட்களும் இம்மாதத்தினுள்ளேயே அடங்குகின்றன.

மரங்களை வணங்குகின்ற தொன்மையான வழிபாட்டைக் கொண்ட நாங்கள், மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நாட்டி வைக்கும் மாண்பையும் கொண்டிருக்கிறோம். இவற்றின் அடிப்படையிலேயே கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனம் செய்து, ‘ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம்’ என்ற மகுட வாசகத்துடன் கடந்த ஆண்டில் இருந்து கடைப்பிடித்து வருகிறோம்

இந்த ஆண்டு, வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி 30ம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்திருந்தார்.

அதன்படி,

வடமாகாண மரநடுகை மாதத் தொடக்க நிகழ்ச்சி யாழ்ப்பாணம் செம்மணி உப்பாற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை (01.11.2015) கோலாகலமாக நடந்தேறியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இத்தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சம்பிரதாயப்பூர்வமாக மரக்கன்றுகளை நாட்டி வைத்ததோடு, மர நடுகைப் பாடல் இறுவட்டையும் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சி.சிறீதரன், த.சித்தார்த்தன்; மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகளோடு பெரும் எண்ணிக்கையில் பொதுமக்களும் மாணவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

‘ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்’ என்ற மகுடவாசகத்துடன் வடமாகாண சுற்றாடல் அமைச்சால் கார்த்திகை முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரை கடைப்பிடிக்கப்பட்டுவரும் வடமாகாண

மரநடுகை மாதத்தின் நடப்பு ஆண்டுக்குரிய கருப்பொருளாக ‘ஐந்து மாவட்டங்கள் ஐந்து இலட்சம் மரக்கன்றுகள்’ என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Response