ஆஸ்திரேலிய அரசின் உயரிய விருதைப் பெற்ற முதல்தமிழர்

தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த டாக்டர் ராமமூர்த்தி, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், தற்போது ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக் கழகத்தில் மூத்த விரிவுரையாளராகவும் புற்றுநோய் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக, ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் வாழும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் குறித்து ஆராய்ச்சிகளை டாக்டர் ராமமூர்த்தி மேற்கொண்டு வருகிறார்.

இவர், ஆஸ்திரேலியாவின் உயரிய ‘பிரைடு ஆஃப் ஆஸ்திரேலியா’ (Pride of Australia) என்ற விருதைப் பெற்று தமிழருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

புற்றுநோய் ஆராய்ச்சிக்காகவும், மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியருக்கான கல்வித் தொண்டுக்காகவும், ஆஸ்திரேலிய பழங்குடியினர் பற்றி ஆராய்ச்சிக்காகவும், டாக்டர் ராமமூர்த்திக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் பத்மஸ்ரீக்கு விருதுக்கு இணையானது இந்த பிரைடு ஆஃப் ஆஸ்திரேலியா விருது என்பது குறிப்பிடத்தக்கது.

டார்வினில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற விழாவில், மாகாண முதல்வர் ஆடம் கில்ஸ் அவர்கள் இந்த விருதை டாக்டர் ராமமூர்த்திக்கு வழங்கினார்.ஆஸ்திரேலியாவின் பெருமை மிகு இவ் விருதைப் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் டாக்டர் ராமமூர்த்தி. கடந்த 13 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை வடக்கு மாகாண தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

Leave a Response