தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க-தி.மு.க, நாம் தமிழர் கட்சி, அமமுக, மநீம ஆகிய கட்சிகள் போட்டியிட்டதால் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 6 கோடியே 28 இலட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க இருந்தனர்.
தமிழகம் முழுவதும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போடத் தொடங்கினார்கள். கொளுத்தும் வெயிலிலும் உற்சாகமாக வாக்களிக்க வந்தனர். முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்குச்சாவடி அருகே அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 விழுக்காடும், காலை 11 நிலவரப்படி 26.90 விழுக்காடும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 விழுக்காடும், மாலை 3 மணி நிலவரப்படி 53.35 விழுக்காடும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 விழுக்காடும், இரவு 7 மணி நிலவரப்படி 71.79 விழுக்காடும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரி, அசாம், மேற்குவங்காளம் மற்றும் கேரள மாநிலஙகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது. இதில் மேற்குவங்காளத்தில் தேர்தல் முடிவடையாததால், 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே)2 ஆம் தேதி தான் நடைபெறும்.
தமிழகத்திலும் அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எனவே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பதை அறிய தேர்தல் முடிவுக்காக 24 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில்….
அ.தி.மு.க. – பா.ச.க. கூட்டணியின் பணபலம் – அதிகார பலம் ஆகியவற்றை மீறியும் – ஆங்காங்கே காவல்துறையினரின் அடக்குமுறைகளைச் சமாளித்தும் கழகத்தினரும் – கூட்டணிக் கட்சித் தோழர்களும் தேர்தல் பணியாற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
அமைச்சர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் கழக வேட்பாளர்களும், கழக முன்னணியினரும் களத்தில் நின்று பணியாற்றி இன்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவிற்குப் பேருதவியாக நின்று ஆக்கபூர்வமான சனநாயகக் கடமையாற்றியிருப்பது போற்றுதலுக்குரியது.
வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும் – தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று நம் வேட்பாளர்கள் இருந்திடலாகாது.
ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் – மதுரை மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை நாம் இந்த நேரத்தில் மறந்துவிடக் கூடாது.
எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நம் தலையாயக் கடமையாகிறது.
எனவே, கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் – கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவரும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட மையங்களில் மிகுந்த கவனத்துடனும் – எச்சரிக்கையுடனும், 24 மணி நேரமும் – இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காவல்துறையின் பணி என்று நினைத்து கழக வேட்பாளர்கள் – தோழர்கள் கவனக்குறைவாக இருந்திடாமல் – வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் “டர்ன் டியூட்டி அடிப்படையில்” அமர்ந்து – கண்காணித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் தேர்தலுக்குப் பிறகு மின்னணு இயந்திரங்களில் மாற்றம் செய்ய மத்திய, மாநில ஆளும்கட்சிகள் முயலக்கூடும் என்பது புலனாகிறது.
தேர்தலை நியாயமாகச் சந்தித்து அதில் கிடைக்கும் வெற்றி தோல்வியை ஏற்காமல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் நமக்கு அமைந்திருக்கிறார்கள் என்பதும், அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்று பிரதான எதிர்க்கட்சித்தலைவர் வெளிப்படையாகக் கூறுகிற அளவுக்கு நிலைமை இருக்கிறதென்பதும் சனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரை அவமானத்தில் கூனிக்குறுக வைக்கிறது.