2500 போதாது 5000 கொடுங்கள் – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

திருவள்ளூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தைக் காணொலிக் காட்சி வழியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது…..

கொரோனா காலம் என்பதால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு இந்த தமிழக அரசுதான் தடை விதித்துள்ளது. தடைவிதித்த முதலமைச்சரே, என்னை ஏன் மக்களைச் சந்திக்கவில்லை? என்று கேட்பதைப் பார்க்கும்போது அவர் நிதானத்தில்தான் பேசுகிறாரா? என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.

ஊரடங்கைத் தளர்த்தினால் தி.மு.க.வினர் கூட்டம் போட்டுவிடுவார்கள் என்பதற்காகவே ஊரடங்கை நீடித்துக்கொண்டே இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி என்பது எங்களுக்கு தெரியாதது அல்ல.

நீங்கள் பிரசாரம் தொடங்கும் நாள் வரைக்கும், ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே வந்தது ஜனநாயக விரோதம் அல்லவா?. எடப்பாடி பழனிச்சாமி என்ற தனிமனிதருக்காக இத்தனை நாட்களாக மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் எத்தனை?. எத்தனை விழாக்கள், நிகழ்ச்சிகள் இதனால் கொண்டாட முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்?. அவர்களுக்கு எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி என்ன பதில் சொல்கிறார்?.

கடந்த சில நாட்களாக ஏதோ பெரிய சாதனையைச் செய்து விட்டதாக பெருமையில் வலம் வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் தொடங்கி விட்டதாகச் சொல்லி வருகிறார். உண்மையில் அப்படித் தொடங்கி இருந்தால் அதனைப் பாராட்டலாம். ஆனால் கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடி போல இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமியின் மினி மருத்துவமனை திட்டம்.

2,000 மருத்துவமனைகளை எடப்பாடி பழனிச்சாமி உருவாக்கி இருக்கிறார். அப்படியானால் இந்த மருத்துவமனைகளுக்காக எத்தனை மருத்துவர்களை புதிதாக வேலைக்கு எடுத்துள்ளீர்கள்?. இல்லை! எத்தனை செவிலியர்களை வேலைக்கு எடுத்துள்ளீர்கள்? இல்லை! எத்தனை மருத்துவமனைகளைப் புதிதாகக் கட்டி இருக்கிறீர்கள். ஏற்கனவே இருக்கிற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை, துணை சுகாதார மருத்துவமனை செவிலியர்களைக் கொண்டு வந்து இதில் உட்கார வைத்து புதிய மருத்துவமனை என்று காட்டுகிறார்கள்.

மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் அமைப்பின் படி இது போன்ற மினி கிளினிக்குகளை அமைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார்கள். அதற்கு அம்மா பெயரை வைத்து புது பெயிண்ட் அடித்து, புது போர்டு மாட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மினி மருத்துவமனையை கடந்த நான்கு ஆண்டு காலத்தில் ஏன் அமைக்கவில்லை?. ஆட்சி முடியப்போகும்போது தான் இவை எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறதா?

ஆட்சி முடியப்போகும்போதுதான் தூர்வார நினைக்கிறார், அணை கட்ட நினைக்கிறார், ஒப்பந்தம் போடுகிறார், குடிமராமத்து செய்யப்போவதாக சொல்கிறார் மொத்தத்தில் இப்போதுதான் தான் ஒரு முதலமைச்சர் என்ற ஞாபகமே அவருக்கு வந்திருக்கிறது.

பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என்று நான் திரும்பத் திரும்பச் சொன்னேன். அதை எடப்பாடி பழனிச்சாமி அரசு தரவில்லை. ஆனால் இன்று திடீரென்று காலையில் ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகைக்காக ரூ.2,500 தரப்போவதாக அறிவித்துள்ளார். மக்கள் கஷ்டப்படும்போது தராமல் தற்போது 4 மாதங்களில் தேர்தல் வருவதால் தனது சுயநலத்திற்காகத் தருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொடுக்கட்டும் பரவாயில்லை புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவியை இப்போதாவது வழங்குங்கள் என்று தி.மு.க. சார்பிலும், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் மீண்டும் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response