அமித்ஷாவின் செயலால் அதிகரிக்கும் மம்தா பானர்ஜியின் செல்வாக்கு – மேற்குவங்க நிலவரம்

பாசகவின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்துக்கு கடந்த வாரம் சென்றபோது அவரின் பாதுகாப்புவாகனம் தாக்கப்பட்டது. அதன்பின் பாசகவுக்கும், திரிணமூல் காங்கிரசுக் கட்சிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.

மேற்கு வங்க தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்களை டெல்லிக்கு அனுப்ப முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இதையடுத்து நட்டாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் இருந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் மத்தியப் பணிக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது.

ஆனால், அந்த அதிகாரிகள் மூவரையும் இன்னும் மாநிலப் பணியிலிருந்து விடுவிக்காமல் மேற்கு வங்க அரசு வைத்துள்ளது. இதை நினைவூட்டி மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று மேற்கு வங்க அரசுக்குக் கடிதம் எழுதியபின்பும் மம்தா அரசு இன்னும் விடுவிக்கவில்லை.

இந்த மோதல்களுக்கு இடையே பாசக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று மேற்குவங்கம் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

இன்று, கொல்கத்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நவீனத்துவத்திற்கும், ஆன்மீகத்திற்கும் விவேகானந்தர் முன் மாதிரி எனக் கூறினார்.

இன்று மிட்னாப்பூர் செல்லும் அமித் ஷா, புரட்சியாளர் குதிராம் போஸுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இரு கோயில்களில் தரிசனம் செய்தார். இந்தப் பயணத்துக்கு இடையே விவசாயி ஒருவரின் இல்லத்தில் அமித் ஷா மதிய உணவு சாப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து மிட்னாப்பூரில் பிரமாண்ட பேரணி பாசக சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த உள்ளது. திரிணமூல் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோர் இன்று பாசகவில் இணைந்தனர்.

இதுகுறித்துப் பேசிய அமித்ஷா, மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது திரிணமூல் காங்கிரசுக் கட்சியில் மம்தா பானர்ஜி மட்டும் தான் இருப்பார், மற்ற அனைவரும் அக்கட்சியில் இருந்து விலகி விடுவார்கள் என்று பேசினார்.

மேற்குவங்க மாநிலத்துக்கு தமிழகம் போலவே 2021 ஏப்ரல் மே மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அங்கு உள்ள மொத்தத் தொகுதிகள் 294. இவற்றில் 2016 தேர்தலில் மம்தா பானர்ஜி 211 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்கு 148 பேர் போதும். ஆனால் மம்தா கட்சிக்கு பெரும்பான்மையைவிட 63 தொகுதிகள் அதிகமாகக் கிடைத்தன.

அவர்களில் 11 பேரை இப்போது பாசக விலைக்கு வாங்கியுள்ளது. இதனால் மம்தா ஆட்சிக்கு மட்டுமல்ல கட்சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியதால் மம்தாவின் கட்சி கலகலத்துப்போய்விட்டதாக ஒரு பிம்பத்தை உள்துறை அமைச்சரே கட்டமைக்கிறார்.

ஆனால், தேர்தல் வேலைகள் தொடங்குகிற போது போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதவர்கள் கட்சி மாறுவது இயல்பு. அதைப் பெரிய விசயமாகப் பேசுவதே பாசகவுக்குப் பலவீனம்.

பாசகவின் இந்தச் செயல் அம்மாநிலத்தில் மம்தாவின் செல்வாக்கை அதிகரிக்க உதவியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Leave a Response