வைரமுத்து சிறுகதைகளைத் திறனாய்வு செய்யும் கலைஞர்கருணாநிதியின் அழகிய தமிழுரை

கவிப்பேரரசு வைரமுத்துவின் “வைரமுத்து சிறுகதைகள்” நூல் வெளியீட்டுவிழா, அக்டோபர் 10 ஆம் நாள், சென்னை காமராசர் அரங்கில் நடந்தது, அந்நூலினை வெளியிட்டு கலைஞர் மு.கருணாநிதி ஆற்றிய உரை…

எழிலார்ந்த முறையிலும், அறிவும் ஆய்வும் சார்ந்த வகையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும், இந்த இனிய விழாவில் தம்பி வைரமுத்து அவர்களின் நாற்பது சிறுகதைகள் அடங்கிய நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதை-உரைநடைக் கவிதை நூல்கள், காவியங்கள், நாவல்கள் என அனைத்தையும் வெளியிடும் நல்ல வாய்ப்பினைத் தொடர்ந்து நான் பெற்று வருகிறேன். இன்றைக்கு இச்சிறுகதைகள் நூலையும் உங்கள் முன்னாள் வைக்கிறேன். அவர் என்னை “ஆசான்” என்றும், நான் அவரை “தம்பி” என்றும் அழைத்திடும் அந்த உயர்ந்த உறவின்பாற்பட்ட உரிமையின் காரணமாகவே அவரது நூல்களை வெளியிடுபவனாக நான் விளங்கி வருகிறேன்.

சிறுகதை என்பது மனித இனம், பேசத்தொடங்கிய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்த மொழி வடிவம். சிந்தனையில் தோன்றிய ஒன்றைப் பற்றி அல்லது கண்ணால் பார்த்த ஒரு காட்சி அல்லது நிகழ்வைப் பற்றி, மற்றவர்களுக்கு எடுத்து விளக்கிச் சொல்லும்போது, அவரவர் நிலைக்கேற்பவும், அறிவு வளர்ச்சிக்கேற்பவும், விளக்குபவருக்கும், விளக்கத்தைக் கேட்பவருக்குமிடையே ஒரு பாலமாகப் பாவிக்கப்பட்டதுதான் சிறுகதை. இலக்கிய வடிவங்கள் அனைத்திலுமே சிறுகதை ஓர் அங்கமாக இருந்து வருகிறது. ஒரு படைப்பாளி, ஒன்றை எழுதிடச் சிந்திக்கும்போது, பாத்திரமாகவோ, காட்சியாகவோ, நிகழ்வாகவோ தான் சிந்திக்கிறான். அந்தச் சிந்தனை முதலில் சிறுகதை எனும் கட்டமைப்பைப் பெற்று, பின்னர் அதுவே – ஒரு விதை பலநூறு விதைகளுக்கு உள்ளடக்கமாக இருப்பதைப் போல – இலக்கிய வடிவங்களைப் பெறுகின்றன.

உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கர் ஆலன் போ, ஓ ஹென்றி, இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு முன்பு, சிறுகதைகளே இல்லையா என்றால், இருந்திருக்கின்றன. பேரிலக்கியமாகக் கருதப்படும் பைபிளில் ஏராளமான சிறுகதைகள் இருக்கின்றன. அண்ணல் நபிகள் நாயகம், சிறுகதைகள் மூலம் மக்களுக்கு ஏராளமான செய்திகளை உணர்த்தியிருக்கிறார்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஏராளமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். நானும் எழுதியிருக்கிறேன். தம்பி வைரமுத்து, “திராவிட இயக்கத்தின் இலக்கிய வெளியில் அறிஞர் அண்ணாவும், கலைஞரும் படைத்துக் காட்டியவற்றுள் சிறந்த சிறுகதைகளையும், புறந்தள்ளுவதை விமர்சன மோசடியென்றே கண்டிக்கிறேன்” என்று இந்த நூலின் முன்னுரையில் சினம் கொண்டிருக்கிறார். அடுத்து, தம்பி வைரமுத்துவின் எழுத்துக்களைப் பற்றிக் கூற வேண்டுமேயானால், இப்போதல்ல, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே, “வைரமுத்து கவிதைகள்” என்ற நூலுக்கு, நான் வழங்கிய அணிந்துரையிலேயே இறுதியாக என்ன குறிப்பிட்டேன் என்றால்,

“இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே, இத்தனை நெருப்புப் பிழம்புகளா?

இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?

இவன் இதயப் பைக்குள் தான் எத்தனை கர்ப்பப் பைகள்?

இவன் மூளைக்குள்ளே தான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?” என்றெல்லாம் எழுதியிருந்தேன். இப்போது இந்த சிறுகதைகள் தொகுப்பு நுhலுக்கு வருகிறேன்!

தம்பி வைரமுத்துவின் இந்தச் சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள முதல் கதையே; மரணத்திற்கு அழுதலும், அநாகரிகப் பட்டியலில் சேர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், அப்பாவின் மரணத்திற்குக்கூட அழமுடியாத அல்லது அழத் தெரியாத ஒரு தலைமுறையைச் சேர்ந்த “ஷிவ்” எனும் சிவராமன்; அப்பாவின் மரணத்திற்கு மொட்டையடித்துக் கொள்ள மறுத்தல், மின் மயானம், முதியோர் இல்லம், ஹவாலா, ஜெட்லாக், கணினித் திரை, ஸ்கைப் – என இன்று புழக்கத்திற்கு வந்துவிட்ட கால ஓட்டத்தின் அடையாளங்கள். இவைகளினால் பின்னப்பட்டது தான் “தூரத்து உறவு” என்னும் கதை.

“வேதங்கள் சொல்லாதது” என்ற கதையில் “மனுதர்மம் கிடக்கட்டும் வக்கீல் சார். மனுஷ தர்மத்துக்கு வாங்க” என்று; கதாசிரியர் தம்பி வைரமுத்து தாழ்த்தப்பட்டோருக்காக வாதாடுவது, அவர்களின் தன்மானத்தை காத்திட வேண்டுமென்ற இலட்சியத் துடிப்பாகும்.

“ஏழையின் தாஜ்மகால்” என்னும் சிறுகதையில், தாஜ்மகாலில் இரண்டு காதல் புதைக்கப்பட்டதா என்ற வினாவினை எழுப்பி, தம்பி வைரமுத்து நம்மை சோகத்தில் ஆழ்த்தும் உரையாடலைக் கேளுங்கள்! “சக்கரவர்த்தியே கேளுங்கள். என் காதலி அலீமா ஒரு செருப்புத் தொழிலாளியின் மகள். நாங்கள் பிரிக்கப்பட்டோம். மொகலாய இராணுவத்தில் சேர்ந்து, நான் மண் காத்தேன். என்னைப் பிரிந்த அவளோ, இந்தக் கல்லறைக்கு மண் சுமந்தாள். காதல் வெறியோடு திரும்பி வந்தேன். காணவில்லை என் கண்மணியை. பூமியெல்லாம் தேடிப்பார்த்தேன். அவளோ பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்தாள். எங்கு தெரியுமா? இதோ இந்த தாஜ்மகாலின் அஸ்திவார ஆழத்தில். இந்தத் தாஜ்மகாலில் மும்தாஜுக்கு முன்பே புதைக்கப்பட்டவள் என் ஆசை அலிமா தான். எனக்கு சாட்சியில்லை. அதோ தாஜ்மகாலை வருடிப்போகும் யமுனா நதியின் அலைகளைக் கேளுங்கள். கதறிக்கொண்டோடும் காற்றைக் கேளுங்கள். உண்மை சொல்லும். உங்களுக்கு இது உடல் புதைத்த இடம்; எனக்கோ என் உயிர் புதைத்த இடம். உங்களுக்கு இது தாஜ்மகால்; எனக்கோ இது அலிமா மகால்” என்று பைத்தியக்காரனாகக் கருதப்படும் இப்ராகிம், ஷாஜகானிடம் கதறுவதுபோல் தம்பி வைரமுத்து தனது உணர்வுகளை இந்தச் சிறுகதையிலே எழுதியிருப்பது – நம் கண்களில் காட்சியாகவும், செவிகளில் எதிரொலியாகவும், நங்கூரம் போட்டு நின்றுவிட்டது.

“யாருக்கும் வாழ்க்கை பக்கமில்லை” என்ற சிறுகதையில் “கொட்டாவி விடும்போது சிரிப்பு வந்தாலோ, சிரிப்பு வரும்போது கொட்டாவி விட்டாலோ முகத்துக்கு ஒரு இடைஞ்சல் நேரும் பாருங்க, அப்படியொரு மூஞ்சியை உடைய கருவாயன் வருகிறான். தம்பி வைரமுத்துவுக்கு எப்படிப்பட்ட கற்பனை பாருங்கள்! எப்படி சிந்தித்திருக்கிறார் பாருங்கள்! கற்பனை செய்தது மாத்திரமல்ல; கண்ட காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் என்று பாருங்கள்! அவனுடைய பெயரே கருவாயன்! அவன் மதினியைப் பொண்ணு கேட்கப் போகும்போது, கருவாயனுக்கு காடு நந்தவனமாய்த் தெரிந்ததாம். வைரமுத்து எழுதியிருக்கிறார், பாருங்கள்! “காடு கடுங்காடு. முள் மண்டிய பெருங்காடு. கொளுத்துகிறது சித்திரைக் கோடை. வெள்ளைக் கல்லை வெண்ணெய் என்று உருக்கப் பார்க்கிறது வெய்யில். (எவ்வளவு அழகான வாக்கியம் இது என்பதைக் கவனிக்க வேண்டும்) (அந்த அளவுக்கு வெள்ளைக் கல்லுக்கும், வெண்ணெய்க்கும் வித்தியாசம் தெரியாமல், வெயில் வெள்ளைக் கல்லை சூடாக்குகிறதாம்!) மனசின் சீதோஷ்ணம் சரியாய் இருக்கையில், காலத்தின் தட்பவெப்பம் எவனை என்ன செய்யும்? நிலா வெளிச்சமாய்ப் படுகிறது கருவாயனுக்கு! சுள்ளென்று விழும் சூரிய ஒழுக்கு. சில்லி முள்ளும், செந்தாழையும், திருகுகள்ளியும், சப்பாத்திக் கள்ளியும், இலந்தையும், நெருஞ்சியும், சூராஞ்செடியும், உடைசாலியும், சிவனார்வேம்பும், வேலும், கருவேலும், இலைக் கற்றாழையும், வேலாந்தழையுமென முட்காடாய் விரிந்துகிடக்கும் வெம்பாலை நந்தவனமாய்த் தெரிந்தது நம்ம பயலுக்கு” (இந்த வார்த்தைகள் எல்லாம் தம்பி வைரமுத்துவுக்கே உரியது) என்பதைப் படிக்கும்போது, நமக்கு மண்டை பிளக்கிறது; உடம்பெல்லாம் முட்கள் தைக்கின்றன.

கறிக் குழம்பில் மண்ணீரல், கழுத்துக் கறி, எலும்பின் உள்மஜ்ஜை, சாமைச் சோறு, கான ரசம், மொச்சைப் பயறு போட்ட கருவாட்டுக் குழம்பு என்று கிராமத்து உணவு வகைகளை மணக்க மணக்கப் பரிமாறியிருக்கிறார் கதாசிரியர் தம்பி வைரமுத்து!

“நீரில் எழுதிய காதல்” என்ற சிறுகதை மீன்களின் காதல் கதை. “லீ”யும் “கீ”யும் காதலை வளர்த்து, “மூ” என்ற வில்லனின் கதையை முடித்து, கடைசியில் செத்துப்போகின்றன. மனிதக் காதலை விட உயர்ந்த காதல் கதை. தோல்வியடைந்தால் தான் காதல் என்பதை நிரூபிக்கின்றன மீன்கள். ஆங்கிலச் சிறுகதையைப் போன்றது மீன்களின் இந்தக் காதல் கதை விளங்குகிறது.

“மாறும் யுகங்கள் மாறுகின்றன”என்ற சிறுகதையில் மூத்த வழக்கறிஞர் டைகர் ராமானுஜம், அமெரிக்காவில் கணிப் பொறியாளனாகப் பணிபுரிந்து வரும் தன் மகன் லோகேஷ்வருக்கு ஏழெட்டு மாதங்களாகப் பெண் பார்த்தார். தேடித் தேடியும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. கடைசியில் முடிவு செய்த பெண் பற்றி தம்பி வைரமுத்து வர்ணிக்கிறார், பாருங்கள்! “கடைசியில் கிடைத்தாள் ஒரு தெய்வச் சிலை. செப்புச்சிலை மேனியாள். செம்பிறை நெற்றியாள். நீலோற்பலக்கண்ணாள். எட்பூநாசியாள். மாதுளம்பூ அதரத்தாள். உடைகளுக்கு மோட்சம் தரும் உறுப்பினள். வெள்ளைக் கமலம் விட்டெழுந்த கலைமகள். மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து கைத்தலம் பற்ற கனாக் கண்டாள் ஆண்டாள்.” அமெரிக்காவிலிருந்து விமானத்திலிருந்து வந்திறங்கினான் மகன் லோகேஷ்வர். வரும்போதே, கருப்பினப் பெண் செரினாவை மனைவியாக்கிக் கொண்டு வந்தான். பெற்றோரின் மனநிலையை நான் கூறுவதை விட, வைரமுத்து எப்படி எழுதியிருக்கிறார் என்பதை நீங்களே இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாக் கதைகளையும் பற்றி எடுத்துரைக்க காலம் இடம் தராததால், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே சொன்னேன்.

தம்பி வைரமுத்து தன்னுடைய ஒருசில கதைகளில், கதையின் கடைசி வாக்கியத்தில் ஒட்டுமொத்தக் கதையையும் ஊற்றி வைக்கும் “ஓ ஹென்றியின்” உத்தியைப் பின்பற்றியிருக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் இந்தச் சிறுகதைகளில்,

புத்தரிலிருந்து மாமன்னர் ராஜராஜன் வரை,

மகா தர்மரிலிருந்து மாற்றுத் திறனாளி வரை,

கவி அப்துல்லாவிலிருந்து பைத்தியக்கார இப்ராகிம் வரை,

வக்கீல் டைகர் இராமானுஜத்திலிருந்து ஈழத்தமிழர் கதிர்காமன் வரை அனைவரும் நடமாடுகிறார்கள்.

பரமாச்சாரியாரும் தலைகாட்டுகிறார்.

பெண்களில் தான் எத்தனைப் பெண்கள் இந்தச் சிறுகதைகளில்?

எமோஷனைத் தவிர்த்து அனைத்திலும் பிராக்டிகலாய் இருந்து கணவனுக்குக் கட்டளையிடும் கௌசல்யா;

கணவன் பாண்டிச்சாமி இறந்தபின் ஊத்துப்பட்டி மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொள்ளத் தயாராகும் ரோசாமணி;

கன்னி கழியாமலேயே மானத்துக்கு அஞ்சி நாண்டு கொண்டு மாண்ட முத்துராணி,

பிள்ளை பெற்ற பிறகு பொய் சொல்லிக் கல்யாணம் செய்துகொண்ட செல்லப் பேச்சி;

தாய்ப்பாலில் விளக்கெரித்த வரகுணள்;

ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, வேலை தேடி வீட்டில் இருக்கும் மட்டுவார்குழலி;

புதுக்கோட்டை கல்லூரி நூலகர் ராஜேந்திரனின் மனதில் காதலை விதைத்து, ராஜேந்திரன் தாக்கப்படுவதற்கும், ஊரை விட்டே ஓடுவதற்கும் காரணமான ஆங்கில இலக்கிய மாணவி அமிர்தமீனாள்;

ரகளை செய்யும் அழகு கொண்டவளும், நவீனப் பெண்களின் பிடிவாதப் பிரதிநிதி என்று தன்னை நினைத்துக் கொண்டிருப்பவளுமான தியா;

மாற்றுத் திறனாளி மனோகரி;

கர்ப்பப்பையை கத்திரித்து அனுப்பிய கானகோகிலா கலா என எத்தனையோ பெண்கள் இந்தச் சிறுகதைகளில் நம்மைச் சந்திக்கிறார்கள்.

வக்கீல் நடேச அய்யரின் தென்னந் தோப்பையும்,

உடல் புதைத்த இடமும் – உயிர் புதைத்த இடமுமான தாஜ்மகாலையும்,

சல்லிப்பட்டி – சாவடிப்பட்டி – மேலமங்கலத்தையும்,

மஞ்சள் ஆறு அணையையும், மத்துவார் குளத்தையும்,

ரோகிணி நதிக் கரையையும்,

திருவல்லிக்கேணி மனித வலையையும்,

வாகன நெரிசலுக்கும், மக்கள் அடர்த்திக்கும் பெயர் போன பெருநகரத்தையும்,

பரவாக்கோட்டையையும், கோவை சிவானந்தா காலனியையும்,

ஆனந்த புரத்தையும், தஞ்சைப் பெருவுடையார் கோயிலையும், சிறுகதைகளின் களங்களாக பட்டிதொட்டியிலிருந்து பட்டணக்கரை வரை தோப்பு, கோயில் என அனைத்தையும் பயன்படுத்தி, கதை நெசவு செய்திருக்கிறார்.

“சிறுகதைகளின் தொகுப்பு” என்று பார்க்கும்போது, பலநூறு கதைகளின் அல்லது சிறுகதைகளின் கூட்டு விளைவு தான் இதிகாசங்களும், காவியங்களும்! சங்கப்பாடல்களிலும் சிறுகதைகள் இருக்கின்றன. சிறுகதைக்கென, சங்க இலக்கியப் பாடல்கள் எழுதப்பட வில்லையெனினும், பாடல்களில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் தற்காலத்தவரும் ரசிக்கும்படியான சிறுகதைகளாக இருக்கின்றன என்பதை மறுத்திட இயலாது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் சங்க இலக்கியங்களில் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் ஒன்பது வரிகளில் எழுதிய ஒரு புறநானூற்றுப் பாடல். அந்தப் பாடலில் உள்ள சிறுகதைக்கான ஒரு கருவை எடுத்து 1945ஆம் ஆண்டு அதாவது 70 ஆண்டுகளுக்கு முன்பு நான் உரைநடைக் கவிதையாக எழுதினேன். அது இப்போது நினைவில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்!

அருமைத் தம்பி வைரமுத்துவோடு நான் அப்போதே போட்டியிட ஆரம்பித்து விட்டேன். (கைதட்டல், சிரிப்பு)

தம்பி வைரமுத்து தனது முன்னுரையில், “இருள் இருந்தால் தானே ஒளி. ஒளிவராமல் போய்விடுமா? அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். எத்தனை காலமோ? ஒளிவரும்போது நான் இருக்க வேண்டும் என்ற அவசியம் உண்டா? எனது சிருஷ்டிகள் இருந்தால் போதும் என்று புதுமைப்பித்தன் முன்மொழிந்ததை, தான் வழிமொழிவதாக” தம்பி வைரமுத்து குறிப்பிட்டிருக்கிறார்.

நான் தம்பி கவிப்பேரரசு வைரமுத்துவுக்குச் சொல்லுவேன். உங்களுடைய படைப்புகள் அனைத்துமே இப்போது போலவே; தலைமுறைகள் தாண்டியும், காலவெளியில் நிலைத்து நிற்கும். உங்களுடைய படைப்புக் கலை, விளைவுகளைப் பற்றிக் கவலையுறாது எனினும், நாளும் நல்லவிளைவுகளே தரும், தரவேண்டும் என்று அன்பு அண்ணன் நான் வாழ்த்துகிறேன்!

Leave a Response