அரசியலுக்கும் வரவில்லை பாசகவுக்கும் ஆதரவில்லை – ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை நேற்று நடந்த ரஜினி மன்ற மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், வெளிப்படையாக அதைச் சொல்லாமல் விரைவில் என் முடிவைச் சொல்வேன் என்று சொல்லிச் சமாளித்திருக்கிறார் ரஜினி.

அதேசமயம், இராகவேந்திரா மண்டபத்தில் பேசிய ரஜினி,

தேர்தலை எதிர்கொள்ளும் முன்பு நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி தேவாலயத்துக்கும், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கும் சென்று வழிபட்டுவிட்டு தொடங்க வேண்டும் என திட்டமிட்டு வைத்திருந்தேன். இன்றோ, எல்லாமும் எதிர்பாராத திருப்பமாக அமைந்தது. ‘இந்தச் சூழலில் இவர் வெளியே எங்கும் செல்லக் கூடாது’ என்று என் குடும்ப உறுப்பினர்களிடம் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். என் உயிரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உங்களை எல்லாம் களத்தில் இறக்கிவிட்டு, அதன் பிறகு எனக்கு ஏதாவது என்றால் நீங்கள் எல்லோரும் நட்டாற்றில் நிற்பீர்களே, அதுதான் என் கவலையாக உள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தில் முஸ்லிம், தலித் உள்ளிட்ட பல சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அப்படி இருக்கும்போது பாஜக போன்ற கட்சிகளோடு நான் எப்படி கூட்டணி வைக்க முடியும், அதற்கு வாய்ப்பே இல்லை. நம் முதுகின் மீது அடுத்தவர்கள் சவாரி செய்வதை நான் எப்போதும் விரும்புவன் அல்ல. கொரோனா முற்றிலும் ஒழிந்தால் அதன்பிறகு பார்க்கலாம். அதுவரைக்கும் அரசியலில் தீவிரம் செலுத்தப் போவதில்லை. ரஜினி மக்கள் மன்றம் எப்போதும்போல இயங்கும். அதன்மூலம் நற்பணிகள் அனைத்தும் தொடரும்.

என்று பேசியிருக்கிறார்.

இதன்மூலம், வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் அவர் பங்கு பெறப்போவதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் அடுத்து பாசகவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவேண்டும் என்று கேட்பார்கள்.

அதற்கும் நேற்றே பதில் சொல்லியிருக்கிறார் ரஜினி.

தன் பேச்சில், அரசியலுக்கு வந்தால் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி, சமயபுரம் ஆகிய கோயில்களுக்குச் செல்ல நினைத்தேன் என்று கூறியதன் மூலம் எம்மதமும் சம்மதம் என்று சொல்லியிருக்கிறார். அதோடு நில்லாமல், ரஜினி மன்றத்தில் முஸ்லிம், தலித் உள்ளிட்ட பல சமூகத்தினர் இருக்கும்போது பாசகவோடு கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

இதன்மூலம், அரசியலுக்கு வரவில்லை என்பதற்காக பாசகவுக்கு ஆதரவு கேட்டு வந்துவிடாதீர்கள் என்பதையும் சொல்லிவிட்டார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response