முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக ஆளுநர் ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் 1991 ஆம் ஆண்டிலிருந்து நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் 29 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
2018 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை மட்டுமல்லாமல், தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியது. அந்தப் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் இந்தப் பரிந்துரை மீது எந்த ஒரு முடிவையும் எடுக்காத நிலையில் தமிழகத்தில் பல்வேறு விமர்சனங்கள் ஆளுநர் மீது வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றமும் ஆளுநர் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித நேற்று காலை 3 நாள் பயணமாக டெல்லி சென்றார்.
டெல்லி சென்ற ஆளுநர் நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவைச் சந்தித்து பேசினார். அந்த ஆலோசனையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை , தமிழக அரசியல் நிலவரம், அரசின் செயல்பாடுகள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. இது குறித்து அறிவிப்பு ஆளுநர் சென்னை திரும்பியதும் வெளியாகலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நக்கீரன் இணைய ஏட்டில் வெளியாகியிருக்கும் செய்தி…..
சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், 05.11.1970 அன்று ஈரோடு கருங்கல்பாளையத்தில், ‘சொல்லின் செல்வரும்’ தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தந்தையுமான ஈ.வி.கே. சம்பத் தலைமையில், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர், காந்தி சிலையைத் திறந்து வைத்தார். இன்றுடன் 50 ஆம் ஆண்டு பொன்விழா என்பதால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று, காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது பல அரசியல் கருத்துகளுக்கு மத்தியில்,
பேரறிவாளன், நளினி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பல கருத்துகள் வருகின்றன அது உண்மையென்றால், அவர்கள் வழக்கில் இருந்து விடுதலை ஆவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அது சட்டத்துக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும்.
என்று கூறியிருக்கிறார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையைக் காங்கிரசுக் கட்சி எதிர்க்கும் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்தக்கருத்து அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.