ரஜினியின் அரசியல் முடிவு – கமல் கருத்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ரஜினியுடனான அவரது நட்பு, ரஜினி எடுத்த முடிவு, ரஜினி அரசியல் குறித்துக் கமல் பேசினார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் கூறியதாவது….

மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தெம்பாக இருந்தது. வட அமெரிக்காவைச் சேர்ந்த கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தில் உள்ளவர்கள் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள துவரிமான் என்ற ஊரில் உள்ள தொடக்கப் பள்ளி சீரமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் சில பிறந்த நாள் பரிசுகளை நான் எதிர்பார்க்கிறேன். நாமே தீர்வு என்ற கொள்கையுடன் மக்கள் நீதி மய்யம் செயல்பட்டு வருகிறது.

அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்துடன் தொடர்ந்து பேசி வருகிறேன். சிலவற்றை கேமராக்களுக்கு முன் கூற முடியாது. அரசியல் பற்றி ரஜினியும் நானும் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து முன்னரே எனக்குத் தெரியும்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார்.

ரஜினி உடல்நிலை நன்றாகி அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறீர்களா? அல்லது அவர் உடல்நலனைப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறீர்களா?

அவர் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது நண்பராக என் ஆசை. நல்லவர்கள் வரவேண்டும் என்பது எனக்கு எப்போதும் உள்ள ஆசை. ஆனால், எது முக்கியம் என்பதை ரஜினி முடிவு செய்யவேண்டும். நான் வற்புறுத்த முடியாது. இரண்டு விதமாகவும் வற்புறுத்த முடியாது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும். என் அன்பு என்னவென்று அவர் அறிவார். அதை இங்கு விளக்க முடியாது.

ரஜினி கட்சி ஆரம்பிக்காதபோது அவரிடம் ஆதரவு கேட்பீர்களா?

எல்லாத் தமிழர்களிடமும் கேட்கிறேன். ரஜினியிடம் கேட்காமல் இருப்பேனா? அவர் கட்சி ஆரம்பித்தால் கேட்பது வேறு விசயம். கட்சி ஆரம்பிக்காதபோது ஆதரவு என்று கேட்பது வேறு விசயம்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

Leave a Response