ஆளுநர்களை அடக்க அரசியல் சட்டத்தில் இரண்டு திருத்தங்கள் வேண்டும் – பழ.நெடுமாறன் கட்டுரை

தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 7.5% இடங்கள் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடாக அளிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஒரு மனதாக நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் காலம் கடத்தி வருகிறார். ஏறத்தாழ ஒரு மாதம் கடந்த பிறகு அக்டோபர் 23-ஆம் தேதி அன்று ஆளுநர் பின் வருமாறு அறிவித்திருக்கிறார்.

“இந்தச் சட்டம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து முடிவெடுக்க தனக்கு மேலும் ஒரு மாத காலம் தேவைப்படும்” என்று கூறியிருக்கிறார். சனநாயக மரபுகளையோ நடைமுறைகளையோ சிறிது கூட மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ஆளுநரின் போக்கு மக்களாட்சி முறையை மதியாத ஆணவப் போக்காகும். ஏற்கெனவே ஏழு தமிழர் விடுதலைத் தொடர்பாக தமிழக அமைச்சரவையும் சட்டமன்றமும் நிறைவேற்றியத் தீர்மானத்தை ஓராண்டு கடந்தும் கூட எத்தகைய முடிவும் எடுக்காமல் அதை இன்னமும் கிடப்பில் போட்டிருக்கிறார்.

தமிழக ஆளுநர் மட்டுமல்ல எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள பா.ச.க.வை சேர்ந்த ஆளுநர்கள் அனைவருமே மாநில முதலமைச்சர்களுக்கும் ஆட்சிகளுக்கும் எதிரானப் போக்கையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். தங்களது அதிகார வரம்பையும் மீறி கட்சிக்காரர்களைப் போல அறிக்கைகள் விடுவதும் பேசுவதும் அவர்களின் பழக்கமாகி விட்டது. ஆளுநர்கள் மத்திய ஆட்சியின் பரிந்துரையின் பெயரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள். ஆனால் மாநில முதல்வர்களும் சட்டமன்றங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. மக்களின் பிரதிநிதிகளை நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் தொடர்ந்து அவமதிப்பதென்பது சனநாயக நெறிமுறைகளை மதிக்காத சர்வதிகாரப் போக்காகும்.

குடியரசுத் தலைவர் பதவியை பொம்மைப் பதவியாக மாற்றிய நடுவண் பா. ச. க. அரசு ஆளுநர்களையும் தனது ஏவலர்களாக மாற்றி அவர்கள் மூலம் மாநில அரசுகளை ஆட்டிப்படைக்க முயல்கிறது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் பிரித்தானிய மன்னரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட வைசிராய்கள், மாநில ஆளுநர்களாக இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டவர்களை நியமித்தார்கள். மாநில மக்களின் மொழி, வரலாறு, பண்பாடு இவை எவை குறித்தும் எதுவும் தெரியாதவர்களும் அந்தந்த மாநிலத்தின் அரசியல், சமுதாய, பொருளாதார நிலைகள் குறித்து எத்தகைய குறைந்தபட்ச அறிவும் இல்லாதவர்களும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு தங்களை கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற ஆணவப் போக்குடன் மக்களை அடக்கி ஒடுக்கி தங்களின் சுரண்டலைத் தொடர்ந்து நடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஆட்சி நடத்தினார்கள்.

நாடு விடுதலைப் பெற்றப் பிறகும் இந்தப் போக்கு சிறிதளவு கூட மாறவில்லை. தொடர்கிறது. வெள்ளைக்கார ஆளுநர்களுக்குப் பதில் கருப்பு நிற ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறத்தில் மட்டுமே இந்த வேறுபாடு நிலவுகிறது. மற்றபடி ஆட்சி முறையில் எத்தகைய மாற்றமும் இல்லை. நாடு விடுதலை பெற்ற பிறகு மொழிவழியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் முழுமையான இறைமையும் தன்னாட்சி உரிமையும் பெற்ற சனநாயகக் குடியரசுகளாக ஆக்கப்பட்டு அவைகள் தாமாக விரும்பி இணைந்த கூட்டாட்சியாக இந்தியா விளங்கும் வகையில் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். காங்கிரசுக் கட்சி விடுதலைப் போராட்ட காலத்தில் இத்தகைய வாக்குறுதியைத்தான் மக்களுக்குக் கொடுத்தது.

1946-ஆம் ஆண்டு இந்தியாவின் விடுதலை குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக வந்த பிரித்தானிய அமைச்சர்கள் குழுவிடம் அன்றைய காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் அளித்த காங்கிரசுக் கட்சியின் அதிகாரப் பூர்வமானத் திட்டத்தில் இவ்வாறுதான் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா விடுதலை பெற்றப் பிறகு உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சிச் சட்டத்திற்கு (Federal) மாறாக கூட்டரசுச் சட்டமாக (Unitary) உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் அதிகாரமற்றவைகளாக ஆக்கப்பட்டன. நடுவண் அரசிடம் அதிகாரம் குவிக்கப்பட்டது. நடுவண் அரசின் ஏவலராக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் மூலம் மாநிலங்கள் ஆட்டிப்படைக்கப்படுகின்றன.

நமது அரசியல் சட்டம் ஆளுநர்களுக்கு வழங்கியிருக்கும் எல்லையற்ற அதிகாரங்களைக் கீழ்க்கண்டப் பட்டியல் சுட்டிக்காட்டுகிறது. இன்றிருக்கும் அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநருக்குள்ள பயங்கர உளத் தேர்வு அதிகாரங்களைப் பல அரசமைப்பு வல்லுனர்கள் ஏறத்தாழத் தொகுத்துத் தந்துள்ளதை வழக்கறிஞர் கு. ச. ஆனந்தன் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்.

அவையாவன :

அ. முதலமைச்சரை நியமித்தல்

ஆ. அமைச்சரவையைக் கலைத்தல்

இ. சட்டமன்றத்தைக் கலைத்தல்

ஈ. சட்டமியற்றுத் துறையைச் சார்ந்த தகவல்களையும் நிர்வாகத்தைச் சார்ந்த தகவல்களையும் முதலமைச்சரிடமிருந்து ஆளுநர் கேட்டுப் பெறுதல்

உ. அமைச்சரவையினால் ஆய்வு செய்யப்படாத சில அரசியல் பிரச்னைகளை, அமைச்சரவை ஆய்வு செய்வதற்காக வைக்கப்படல் வேண்டுமென முதலமைச்சரை ஆளுநர் முறைப்படுத்துதல்

ஊ. மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்ட முன்வடிவிற்கு ஆளுநர் தனது இசைவினை வழங்காமலிருத்தல். அதனை புனர் பரிசீலனை செய்யக் கோரி மாநிலச் சட்டமன்றனத்திற்கே திருப்பி அனுப்புதல்

எ. மாநிலச் சட்டமன்றத்தால் முறையாக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் இசைவைப் பெறுவதற்காக ஒதுக்கி வைத்துக் கொள்ளுதல்

ஏ. சில அரசியல் நோக்கங்களுக்கான அவசரச் சட்டங்களைப் பிறப்பிப்பதற்கு முன்னால் குடியரசுத் தலைவரின் குறிப்புகளை வேண்டிப் பெறுதல்.

ஐ. மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட இயந்திரம் (நிர்வாகம்) கேடடைந்துவிட்டது எனத் தெளிவாக்கும் அறிக்கையினைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல்.

இவை போன்றதும் இன்னம் பல மாநில நிர்வாகச் சூழல்களும் ஆளுநரின் விருப்பதிகாரங்களின் கீழ் வருகின்றன என நடைமுறையில் தெரிய வருகின்றது.

குடியரசு முறையிலேயே மாநில அரசியல் நிர்வாகம் நடைபெறுகிறது என அரசமைப்புச் சட்டம் பொதுவாக தத்துவ விளக்கம் அளித்தாலும், உண்மையில் மத்திய அரசாங்கத்தின் கையாளான ஆளுநர் எப்போது விரும்பினாலும் குடியரசுக் கோட்பாடுகளை அழித்துவிட்டு மாநிலத்தின் ஆட்சியைத் “தனது” சர்வாதிகார ஆட்சியாக மாற்றுவதற்குரிய அத்துணை அதிகாரங்களும் ஆளுநருக்கு அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ளன.

நமது அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட்ட போது அரசியல் யாப்பு அவையில் ஆளுநர்கள் நியமனம் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. ஆளுநர் பதவி தேவையற்றது என சிலரும் மாநில சட்டமன்றத்தினால் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சிலரும் மத்திய அரசு நான்கு பேர் கொண்ட ஒரு பட்டியலை மாநில முதலமைச்சருக்கு அனுப்பி அவரால் ஏற்றுக் கொள்ளப்படுபவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என சிலரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தலைமை அமைச்சர் நேரு அவர்கள் பின் வரும் கருத்தை வெளியிட்டார்.

“மாநில அரசு ஒப்புக் கொள்ளக் கூடிய பொதுவான ஒருவரை நியமிப்பது சிறப்பாக இருக்கும். அப்போதுதான் அவரால் அங்கு கடமையாற்ற முடியும். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமித்தால் அவர்கள் தங்களது அரசியல் நடவடிக்கைகளைத் தொடரக் கூடும். எனவே கல்வித் துறைப் போன்ற துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால் அவர்கள் மாநில அரசுடன் முழுமையாக ஒத்துழைத்து அரசின் திட்டங்களை செயல்படுத்த எல்லா வகையிலும் அறிவுரை கூறுவதுடன் துணையாகவும் இருப்பார்கள். மக்கள் மத்தியிலும் அவருக்கு மதிப்பு ஏற்படும்.” எனக் கூறினார்.

பிற்காலத்தில் இந்தியக் குடியரசின் துணைத் தலைவராக பதவி வகித்த புகழ் பெற்ற சட்டத்துறை அறிஞரான ஜி. எஸ். பதக், 3-4-1970-இல் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் பின் வருமாறு குறிப்பிட்டார்.

“அமைச்சரவையின் அறிவுரைக்கு கட்டுப்பட வேண்டிய ஆளுநர் நடுவண் அரசிடமிருந்து தனித்து சுதந்திரமாக இயங்க வேண்டும். மாநில அமைச்சரவையின் அறிவுரைகளுக்கும் நடுவண் அரசின் அறிவுரைகளுக்கும் இடையே சில வேளைகளில் மாறுபாடு ஏற்படலாம். அத்தகையக் கட்டங்களில் நடுவண் அரசை அறிவுரையை ஆளுநர்கள் புறக்கணித்து மாநில அமைச்சரவையின் அறிவுரையின்படியே செயல்பட வேண்டும். இதுவே தெளிவான மறுக்க முடியாத சட்டநிலையாகும்.” எனக் கூறினார்.

ஆனால் இன்று நடைமுறையில் நேரு, ஜி. எஸ். பதக் போன்றவர்களின் கருத்துக்கள் முற்றிலுமாக தூக்கி எறியப்பட்டுவிட்டன. நடுவண் அரசில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி தேர்தல்களில் தோற்றுப் போனவர்கள், முன்னாள் அமைச்சர்கள், வேறு எத்தகையப் பதவிகளும் கிடைக்கப் பெறாதவர்கள் ஆகியோர் மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்படும் போக்கு வளர்ந்தோங்கி விட்டது. காங்கிரசு, சனதா, பா. ச. க., போன்ற பல கட்சிகள் தில்லியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது அவை அனைத்துமே அரசியல் நெறிமுறைகளை சற்றும் மதிக்காமல் தங்களது கட்சிகளைச் சேர்ந்தவர்களையே ஆளுநர்களாக நியமித்தனர். இதன் விளைவாக பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

உண்மையான கூட்டாட்சி அரசியல் சட்டம் கொண்டுவரப்பட்டால் ஒழிய இந்தப் பிரச்னைகளுக்கு முடிவு கட்ட முடியாது. ஆனாலும் அத்தகைய கூட்டாட்சிச் சட்டம் கொண்டுவரப்படும் வரையில் இப்போதுள்ள அரசியல் சட்டத்தில் கீழ்க்கண்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

· மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுபவரை ஏற்று மாநில சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் ஒழிய அத்தகையவர் ஆளுநராக நியமிக்கப்படக் கூடாது.

· நீதி நெறிக்கு மாறாக நடந்து கொள்ளும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது அரசியல் குற்றச்சாட்டு நடவடிக்கை (impeachment) எடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருப்பதைப் போல ஆளுநர்களுக்கு எதிராக இத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் உரிமை சட்டமன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அப்போதுதான் ஆளுநர்கள் சட்டமன்றங்களையும் அவைகள் நிறைவேற்றும் சட்டங்களையும் தீர்மானங்களையும் மதித்துக் கடமையாற்றுவார்கள்.

– பழ.நெடுமாறன்

Leave a Response