தமிழ்த் தேசிய இனப் போராளி தமிழரசன் நினைவுநாள் – இன்று

இன்று தோழர் தமிழரசன் நினைவு நாள்.

தோழர் தமிழரசன் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தில் பிறந்தவர். பொறியியல் மாணவராக இருந்த காலத்திலேயே தன்னை நக்சல்பாரி கட்சி எனப்படும் மார்க்சிய லெனினிய இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். தமிழரசன் முந்திரிக் காட்டு மக்களின் நாயகன் என்று சொன்னால் அது மிகையல்ல.

எண்ணற்ற மக்கள் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். குறிப்பாக, பட்டியல் இன மக்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்பார். தனிக் குவளை எதிர்த்து டீக்கடைகள் முன்பு நடத்திய போராட்டம். அன்னக்கிளி என்ற சகோதரி கொல்லப்பட்ட சமயத்தில் அவர் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் மிக முக்கியமானவை.

நக்சல்பாரி தலைவர் தோழர் சாருமஜீம்தார் மறைவுக்குப் பின் இந்திய அளவிலும் குறிப்பாக தமிழகத்திலும் மார்க்சிய லெனினிய கட்சி மூன்று போக்குகளாக உடைந்த சமயத்தில் கூட்டக்குழு என்ற நக்சல்பாரி அமைப்பில் மிக முக்கிய பங்காற்றினார். அந்த அமைப்பு தான் பிற்காலத்தில் ஆந்திர மக்கள் யுத்தம் கட்சியில் இணைந்தது.

அதன் பின்னான நாட்களில், தேசிய இனப் பிரச்சினையின் காரணமாக முரண்பட்டு தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி என்ற தனி அமைப்பு கண்டார். அவர் தேசிய இன மற்றும் சாதியப் பிரச்சினைகளின் தீவிரத்தை உணர்ந்து எழுதிய பெண்ணாடம், மீன்சுருட்டி அறிக்கைகள் தமிழக வரலாற்றில் முக்கியமானவை.

ஏட்டுக் கல்வியோடு நிறுத்தி கொள்ளாமல் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை அமைப்பு ரீதியாக முன்னெடுத்த தமிழகத்தின் முதல் தேசிய இனப்போராளி தோழர் தமிழரசன் தான்.

1980களில், எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது இதே செப்டம்பர் முதல் நாளில் பொதுமக்கள் என்ற பெயரில் போலீசார் அவரையும் இன்னும் சில தோழர்களையும் கொடூரமாக கொன்றார்கள். ஒரு பக்கம் ஈழ விடுதலை போராட்டத்துக்கு ஆதரவானவராய் தன்னை காட்டிக் கொண்ட எம்.ஜி.ஆர் இன்னொரு பக்கம் தமிழின போராளிகளை அழித்தொழித்தார்.

ஆண்டுகள் பல கடந்தாலும் தமிழக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தோழர் தமிழரசன். அப்பழுக்கற்ற மாவீரன். நான் மக்கள் யுத்தம் அமைப்பில் பணியாற்றிய நேரத்தில் தனிப்பட்ட முறையில் என்னுடன் பழகிய அன்புக்குரியவர். அவரது நினைவு நீடூழி வாழ்க.

தோழர் தியாகியான நாளில் நான் எழுதிய கவிதை கீழே…

தோழர் தமிழரசன்
முந்திரி கொட்டை சேகரிக்கும்
மக்களின் பாடல்களில்
நீயிருப்பாய் நிழலாக.

உன் வழியில்
நிமிர்ந்து முன்னேறும்
தோழர்களின் விழிகளில்
நீயிருப்பாய் நிசமாக.

நக்சல்பாரி தியாகி
தோழர் தமிழரசனுக்கு செவ்வணக்கம்.

– பாரதிநாதன்

Leave a Response