தமிழ்த்தேசிய முன்னோடி தமிழரசன் தாயார் மறைவு – பெ.மணியரசன் இரங்கல்

தமிழ்த் தேசியத் தலைவர் தமிழரசன் அன்னையார் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்….

தமிழ்த்தேசிய முன்னோடித் தலைவர்களில் ஒருவரும், தமிழர் உரிமைகளுக்காக உயிரீகம் செய்தவருமான தோழர் தமிழரசன் அவர்களின் அருமை அன்னையார் பதூசு அம்மையார் அவர்கள் 31.10.2020 அன்று காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.

அதிகாரியாக வேலைக்குப் போவார் என்ற எதிர்பார்ப்பில் மகனைக் கோவை பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தார்கள். மகனோ, தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் போராடினார். காவல் துறையினரின் ஓயாத விசாரணைகள்; தொல்லைகள். அவ்வளவையும் தாங்கினார் பதூசு அம்மையார்.

இறுதியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு தமிழரசன் உயிரீகம் செய்தார். அந்த வேதனைக் கிடையிலும் தமிழரசன் குறித்துப் பெருமிதம் கொண்ட தாயாகவே பதூசு அம்மா விளங்கினார்.

பதூசு அம்மா அவர்களின் மறைவிற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response