தொடர்ந்து மூன்று நாட்களாக பாஜகவை கேள்விகளால் துளைக்கும் திருமாவளவவன்

மே 23 ஆம் தேதி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி கைது செய்யப்பட்டதையொட்டி, அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? என்று கண்டனம் தெரிவித்தார் தொல்.திருமாவளவன்.

அதோடு,பாஜக மற்றும் அதிமுக நடத்தும் சாதிஅரசியலையும், சாதி மதவெறி சக்திகளின் கூட்டுச்சதியையும் சனநாயகசக்திகள் ஒருங்கிணைந்து முறியடிப்போம் என்றும் கூறியிருந்தார்.

சொன்னதோடு நின்றுவிடாமல் சமூகவலைதளம் மூலம் பாஜக மற்றும் அதிமுகவுக்கு கேள்விகள் எழுப்பிவருகிறார்.

மூன்றுநாட்களாகத் தொடர்ந்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள்….

பாஜக சாதிஅரசியல்-1:
தலித் மக்களுக்கான மாநில ஆணையம் #statecommission இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதனை உடனடியாக அமைக்க தமிழக முதல்வர் முன்வருவாரா? கூட்டணிக் கட்சி பாஜக இதனை வலியுறுத்துமா?

பாஜகசாதிஅரசியல்_2:
ஆண்டுக்கு 2 முறை முதல்வர் தலைமையில் நடைபெற வேண்டிய ‘விழிகண்’ கூட்டம்
3 ஆண்டுகளாக நடைபெறவில்லையே; கூட்டணிக்கட்சியான பாஜக ஏனென்று விளக்கம் கேட்குமா? உடனடியாக நடத்தச்சொல்லி முதல்வரை வலியுறுத்துமா?

#பாஜகசாதிஅரசியல்_3:
தலித்துகளுக்கான துணைத்திட்டத்தை #Sub_plan நடைமுறைப்படுத்துவதற்கென தமிழகஅரசு சட்டம் #legislation இயற்றவில்லையே; கூட்டணிக் கட்சியான பாஜக, ஏனென்று விளக்கம் கோருமா?அவ்வாறு சட்டம் இயற்றும்படி முதல்வரிடம் வலியுறுத்துமா?

பாஜகசாதிஅரசியல்_4:
தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தேசியகுற்ற ஆவணமையம் #NationalCrimesRecord அறிவித்துள்ளது. சாதிவெறியர்களால் ஆணவக்கொலைகளும் #honourkillings அதிகரித்துள்ளன. இதுகுறித்து கூட்டணிக்கட்சியான பாஜக, தமிழகமுதல்வரிடம் விளக்கம் கேட்குமா?

பாஜகசாதிஅரசியல்_5:
தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக வலியுத்துமா?அந்த சாதிவெறியர்களை வெளிப்படையாகக் கண்டிக்குமா? தலித் தலைவர்களை நாற்காலியில் அமரவைக்குமா?

பாஜகசாதிஅரசியல்_6:
பெண்கள்,சிறுமிகளுக்கு எதிரானவன்கொடுமைகள் குறித்து புகார்செய்ய #tollfreenumber உள்ளதே; அதுபோல தலித்துகளுக்கு எதிரான #வன்கொடுமைகள் தொடர்பாக புகார்செய்ய toll free number வழங்க, கூட்டணிக்கட்சியான பாஜக தமிழக அரசை வற்புறுத்துமா?

பாஜகசாதிஅரசியல்_7:
தமிழகத்தின் மூத்தஅமைச்சர் ஒருவர் அண்மையில் ஒரு பழங்குடியினச் சிறுவனை #tribal_boy அழைத்து தனது செருப்பைக் கழற்றச் சொன்னாரே; அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி கைதுசெய்ய வேண்டுமென கூட்டணிக் கட்சியான பாஜக,தமிழக முதல்வரிடம் வலியுறுத்துமா?

பாஜகசாதிஅரசியல்_8:
சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித்சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா?

பாஜகசாதிஅரசியல்_9 :
தனது இறுதிமூச்சுவரை சாதியத்தை/இந்துத்துவத்தை/ #சனாதனத்தை/மூர்க்கமாக எதிர்த்த முரட்டுப்போராளி புரட்சியாளர்அம்பேத்கர். எதிர்ப்பின் உச்சமாக இந்து மதத்தைவிட்டு பல இலட்சம் பேரோடு வெளியேறியவர். அவரை எதிர்க்கத்தானே வேண்டும்?ஆதரிப்பதுஏன்? பாஜக விளக்குமா?

பாஜகசாதிஅரசியல்_10:
சாதிஒழிப்புக்காக 10இலட்சம் பேருடன் ஒரேநாளில் பௌத்தம்தழுவி இந்துமதத்தை ஆட்டம் காண வைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.அவரளவுக்கு, இந்துமதத்தின் மீது தாக்குதல் தொடுத்தவர் யார்?கடவுள் அவதாரங்களைத் தோலுரித்தவர்யார்? அப்படிபட்ட அம்பேத்கர் உங்களுக்கு எதிரியா இல்லையா?

பாஜகசாதிஅரசியல்_11:
தமிழ்நாடெங்கும் சுமார் 12.5 லட்சம்ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. ஆனால், அவை தலித் அல்லாதோரின் ஆக்கிரமிப்பில்உள்ளன. அவற்றை உரிய தலித்மக்களிடமே ஒப்படைக்க வேண்டுமென உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புகள் உள்ளன.அவற்றை மீட்பதற்கு பாஜக தமிழகமுதல்வரிடம் வலியுறுத்துமா?

பாஜகசாதிஅரசியல்_12:
பஞ்சமி நிலங்களை மீட்பதற்கென விசிக விடுத்த கோரிக்கையை ஏற்று,கலைஞர் நியமித்த நீதியரசர் மருதமுத்து ஆணையத்தை உயிர்ப்பித்து,மீண்டும் செயல்பட வைக்க தமிழக அரசிடம், கூட்டணிக்கட்சியான பாஜக கோரிக்கை எழுப்புமா? அல்லது புதியஆணையம் அமைக்க வலியுறுத்துமா?

பாஜகசாதிஅரசியல்_13:
சிறுதாவூர்பங்களாவும் பஞ்சமி நிலத்தில்தான் உள்ளதென குற்றச்சாட்டு உள்ளதே; அது பாஜகவுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியுமெனில், அதனையும் மீட்டு தலித்மக்களிடம் ஒப்படைக்க பாஜக போராடுமா? அதன்மூலம்
தலித்மக்கள் மீதான தமது அக்கறையை உறுதிப் படுத்துமா?

பாஜகசாதிஅரசியல்_14:
இந்தியாவெங்கும் தலைவிரித்தாடும் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குச் சட்டம்வேண்டும் என்பதில், பாஜகவின் #நிலைப்பாடு என்ன? மத்தியில் ஆளுங்கட்சியாயிருந்தும் அப்படியொரு சட்டமியற்ற தயக்கமென்ன?அச்சட்டத்தை இயற்றும்படி தமிழகஅரசையும் பாஜக வற்புறுத்துமா?

பாஜகசாதிஅரசியல்_15:
தலித் மற்றும் பழங்குடி மக்களின்மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் பாஜக, இதுகாறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த postmatric scholarship- கல்விஉதவித் தொகையை முடக்கியது ஏன்? மீண்டும் அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்து,தமது தலித் பாசத்தைக்காட்ட பாஜக முன்வருமா?

இவ்வாறு அவர் கேள்விகள் எழுப்பியுள்ளார்.

மே 23 தொடங்கி இன்று (மே 25 காலை 7 மணி வரை) மூன்று நாட்களாக அவருடைய கேள்விகள் தொடர்கின்றன.இதுவரை 15 கேள்விகள் வந்துள்ளன. இன்னும் தொடரும் எனவும் தெரிகிறது. ஆனால், இதுவரை உரிய முறையில் யாரும் பதிலளிக்கவில்லை.

Leave a Response