திவால் நிலையில் இந்திய அரசு – பெ.மணியரசன் அச்சம்

நாளேடுகளின் கோரிக்கைகளை நடுவண் அரசு ஏற்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில்…..

ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின் உரிமையாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 18.05.2020 அன்று சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கும் நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் உரியக் கோரிக்கை மனுவை – அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி இவர்களிடம் இம்மனுவை அளித்துள்ளனர்.

“இந்து” ஆங்கில நாளிதழ் சார்பில் என்.இராம், “தினத்தந்தி” நாளிதழ் சார்பில் எஸ்.பாலசுப்பிரமணிய ஆதித்தன், “நியூ இந்தியன் விரைவுவண்டி” சார்பில் மனோஜ் குமார், “தினகரன்” சார்பில் ஆர்.எம்.ஆர். இரமேஷ், தினமலர் சார்பில் எல்.ஆதிமூலம் ஆகியோர் கையொப்பமிட்டு இம்மனுவை கொடுத்துள்ளனர்.

அம்மனுவில், கொரோனா பொது முடக்கத்தால் இரண்டு மாதங்களாக, அனைத்திந்திய அளவில் நாளேடுகளுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த இழப்பிற்கு முக்கியக் காரணம் விளம்பரங்கள் வராததே என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய அரசு இந்நாளேடுகளுக்குக் கொடுத்த விளம்பரங்களுக்குத் தர வேண்டிய பாக்கித் தொகை ஏராளமாக இருக்கிறது என்றும் அத்தொகையை உடனே தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர். அத்துடன் இந்த இழப்புக் காலத்தில் செய்தி ஏடுகளுக்கு உதவும் வகையில் இந்திய அரசு தரும் விளம்பரத் தொகைகளை 100 விழுக்காடு உயர்த்தித் தருமாறும், வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அச்சுத்தாள்களுக்குச் சுங்க வரி விலக்கு அளிக்குமாறும் கோரியுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசுடைமை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, ஏமாற்றி மோசடி செய்த பெரும் பெரும் தொழில் முதலாளிகளுக்கு, அக்கடன்களைத் தள்ளுபடி செய்தும், வாராக்கடன் என்று வசூல் நடவடிக்கைகளுக்கு உட்படாத பட்டியலில் சேர்த்தும் சலுகைகள் அளிக்கும் இந்திய அரசு, நாட்டின் சனநாயகத்தின் தூண்களாக விளங்கும் செய்தி ஏடுகளுக்கு உதவிட மேற்படி கோரிக்கைகளை ஏற்குமாறு இந்திய அரசை வலியுறுத்திட, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

மாநில அரசுக்குத் தர வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியில் பாக்கி, மாநிலத் திட்ட மானியங்களில் பாக்கி என பாக்கி வைத்திருப்பது போல், நரேந்திர மோடி அரசு நாளேடுகளுக்குத் தந்த விளம்பரத் தொகையிலும் பாக்கி வைத்திருக்கிறது என்ற செய்தியை அறியும்போது, இந்திய அரசின் நிதிநிலை இவ்வளவு திவால் நிலையில் இருக்கிறதா என்ற அச்சமும் ஏற்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response