ரஜினி மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் – திவிக அதிரடி

சென்னை எழும்பூர் 2 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில், நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலைக்கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி வழக்குத் தொடர்ந்தார். அதில், ‘சென்னை திருவல்லிகேணியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் பற்றி சில கருத்துகளைத் தெரிவித்தார். அவரது பேச்சு இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் விதமாகவும் உள்ளது.

இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசுதல்) 504 மற்றும் 505 (கோபத்தை தூண்டும் விதமாகவும், வெறுக்கத்தக்க வகையில் பேசுதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ரோஸ்லின் துரை விசாரித்தார். அப்போது, ஆறுமுகம் என்பவர் தன்னை இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘ரஜினிகாந்தை இந்த வழக்கில் குற்றவாளியாக குறிப்பிட்டு, 3-வது எதிர் மனுதாரராக மனுதாரர் சேர்த்தது சட்டப்படி தவறாகும்’ என்று கூறியிருந்தார்.

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் கான்சியஸ் இளங்கோ, இடையீட்டு மனுதாரர் சார்பில் வக்கீல் நமோ நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ரோஸ்லின் துரை நேற்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது….

ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அவர் தெரிவித்த கருத்து, அவதூறாக மனுதாரர் கருதினால், நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை தனி நபர் வழக்காகத் தொடரலாம்.

எனவே, ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

ரஜினிகாந்த் மீது 04.03.2020 ல் மீண்டும் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கு !
தற்போதைய நிலை என்ன? நீதிமன்றம் கூறியுள்ளது என்ன?

துக்ளக் ஏட்டின் 50 ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு பொய்யான செய்தியை உள்நோக்கத்தோடு வன்முறையைத் தூண்டும் விதமாக வெறுப்புப் பிரச்சாரம் செய்தார்.

ரஜினிகாந்தின் இந்த உள்நோக்கத்தோடு பேசிய பேச்சு வன்முறையைத் தூண்டும் விதமாகவும்,வெறுப்பு பிரச்சாரமாகவும் இருக்கிறது ஆகவே ரஜினியின் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் 50 க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் புகார் மனு அளித்தது.

ஆனால் அந்த புகார் மனுக்களின் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருந்ததை அடுத்து ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கழகத்தின் சார்பில் வழக்கு 21.01.2020 ல் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் காவல்நிலையங்களில் புகார் அளித்து 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் நீதிமன்றத்தை ஏன் அணுகினீர்கள் என்றும் காவல்துறைக்கு போதிய காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகும் அவர்கள் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை வழங்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் ஆகவே இந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் முதலில் தொடர்ந்த அந்த வழக்கைத் திரும்பப் பெற்றது.

அதன் பிறகு நீதிமன்றத்தில் தமிழகக் காவல்துறை கேட்ட கால அவகாசம் முடிந்து பல நாட்கள் ஆனதற்குப் பிறகும் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மீது எந்த வழக்கையும் காவல்துறை இதுவரை பதிவு செய்யவில்லை.

இதனை சுட்டிக்காட்டி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 04.03.2020 ம் தேதி சென்னை குற்றவியல் எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி அவர்கள் வழக்குத் தொடர்ந்தார்கள்.அந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நேற்று ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது.

வன்முறையைத் தூண்டும் விதமாகவும், வெறுப்பு பிரச்சாரமாகவும் பேசியதற்காக ரஜினி மீது பிரிவு 156(3)குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்காகப் பதிவு செய்ய நாம் அளித்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அதற்குப் பதிலாக ரஜினி மீது தனிப்பட்ட புகாராக
அவதூறு வழக்குப் பதிவு செய்ய மனு அளிக்குமாறு வழிகாட்டியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முரண்பட்டதாகவே நமக்கு தெரிகிறது.

ரஜினி துக்ளக் ஆண்டு விழாவில் ஜன.14ஆம் தேதி உள் நோக்கத்தோடு நடக்காத ஒன்றைப் பேசுகிறார்.அதன் பின்பு ஜனவரி 23ஆம் தேதி செங்கல்பட்டு பாலவாக்கத்தில பெரியார் சிலை உடைக்கப்பட்டது.பெரியார் சிலையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டார் ( Crime.No.20/2020 Palavakkam Police Station) அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குண்டர் சட்டம் என்பது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் படியும் சமூகத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் வெறுப்புணர்வோடு நடந்து கொள்பவர்களை தடுக்கும் விதமாகவே குண்டர் சட்டம் பாய்ச்சப்படுகிறது.

அவ்வாறு வெறுப்பு பேச்சின் விளைவாக நடந்த வன்முறைச்செயலைச் செய்பவருக்கு குண்டர் சட்டம் போடும் அதே காவல்துறைக்கு அந்த வெறுப்பு பேச்சைப் பேசி வன்முறைக்குத் தூண்டுகோலாய் இருந்தவர் மீது அவதூறு வழக்கு மட்டும் பதிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்துவது வேதனையளிக்கிறது.

ரஜினிகாந்தின் இந்தப் பேச்சைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றன.ரஜினிகாந்தின் பேச்சை ஆதரித்து சேலத்தில் பெரியார் ஊர்வலம் நடத்திய அதே இடத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஊர்வலம் செல்ல முயன்று காவல்துறையுடன் தள்ளுமுள்ளு செய்து தடியடி பிரயோகம் நடத்தி அந்தக் கூட்டத்தைக் கலைக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கும் பொது அமைதியும் ரஜினியின் பேச்சால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் நன்கு உணர முடியும்.

இந்நிலையில் ரஜினி மீது நாம் கேட்ட வன்முறையைத் தூண்டும் விதமாகவும் வெறுப்புப் பிரச்சாரம் ஆகவும் பேசியதற்கு 156(3) குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாமல் வெறும் அவதூறு வழக்கு பிரிவு 200 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தி இருப்பது எவ்வாறு சரியானதாக இருக்கும் ?

ரஜினியின் உள்நோக்க வெறுப்புப் பேச்சு குறித்து சட்டமேல் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனைகளை நமது கழக வழக்கறிஞர்கள் செய்து வருகிறார்கள்.

ரஜினியின் இந்த உள்நோக்கத்துடன் ஆன வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சு மீது சரியான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை திராவிடர் விடுதலை கழகத்தின் சட்டப் போராட்டம் தொடரும்.

– திராவிடர் விடுதலைக் கழக தலைமையகம்,
11.03.2020.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response