இரகசியக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைவர்கள் – சென்னை பேரணி செய்திகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதற்காக அவர்கள் சென்னை காவல்துறை ஆணியர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நேற்று முன்தினம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். சென்னை நகரில் கடந்த 13-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு தடை உத்தரவு அமலில் இருப்பதால், அவர்களுடைய கோரிக்கையை ஏ.கே.விஸ்வநாதன் நிராகரித்தார்.

இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்று நேற்று முன்தினம் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், இஸ்லாமியர்களின் போராட்டத்துக்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எனினும் திட்டமிட்டபடி தடையை மீறி தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் அதிரடியாக அறிவித்தனர். அதன்படி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் முன்பு நேற்று காலை 9 மணி முதல் இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்களும், முஸ்லிம் மக்களும் திரளத் தொடங்கினர்.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கார், வேன், ஆட்டோ, ரெயில், பஸ்கள் மூலம் திரண்டு வந்தனர். இதனால் வாலாஜா சாலை முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஏராளமானோர் தேசியக் கொடியை ஏந்தியும், முகம் மற்றும் கைகளில் மூவர்ணக் கொடியின் நிறத்தை வரைந்தபடியும் கலந்துகொண்டனர். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

பேரணியை முன்னெடுத்துச் செல்வதற்காக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனம் மேடை போன்று மாற்றப்பட்டது.

அந்த மேடையில், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு தலைவர் காஜா மைதீன் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், உலமா ஜமாஅத் செயலாளர் அனூர் பாஷா, தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்க தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்பட 26 இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் நின்று கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வழி நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் து.வெ.வேணுகோபால், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்கள் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகியவற்றிற்கு எதிராகப் பேசினர். கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி ஆவேசமாக குரல் எழுப்பினர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேடையில் பேசிய இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள், அனைவரையும் அமைதியாகக் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். பின்னர் தேசிய கீதம் பாடல் இசைக்கப்பட்டது. இந்த பாடல் முடிந்ததும் அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நடத்திய போராட்டத்தால் சென்னை முழுவதும் நேற்று ஸ்தம்பித்தது.

முஸ்லிம்கள் தடையை மீறிப் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடி மேற்பார்வையில் கூடுதல் ஆணையர், 3 இணை ஆணையர்கள், 10 துணை ஆணையர்கள், 28 உதவி ஆணையர்கள், 80 ஆய்வாளர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

20 சி.சி.டி.வி. கேமராக்கள், 5 டிரோன் கேமராக்கள் மூலம் 5 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து கூட்டத்தைக் கண்காணித்தனர். சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்காக சேப்பாக்கம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. ஆங்காங்கே முதன்முறையாக இரும்பு தடுப்பு முள்வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முற்பட்டால் அவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்காக ஆங்காங்கே மாநகரப் பேருந்துகளும், காவல்துறை வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு- ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் அங்கு திரண்டிருந்த கூட்டத்தைக் கைது செய்தால் அவர்களைத் தங்க வைக்கவே போதுமான இடம் இல்லை என்பதாலும் கூட்டிச்செல்ல வாகனங்கள் போதாது என்பதாலும் போராட்டத்தை இப்படியே நிறுத்திக் கொள்ள இரகசியமாகக் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டதால் அனைவரையும் கலைந்து செல்லக் கேட்டுக் கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் போராட்டம் அமைதியான முறையில் முடிவடைந்தது.

Leave a Response