தமிழில் குடமுழுக்கு – விடாது கண்காணிக்கும் பெ.மணியரசன் குழுவினர்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில்,
தமிழுக்கு முதன்மை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று (04.02.2020) பிற்பகலில், அதிகாரிகளிடம்
நேரில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தஞ்சை – இணை ஆணையர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் ஆகியோருக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கையெழுத்திட்டு வழங்கியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது….

“தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்தும்படி ஆணை இடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் ரிட் மனு தாக்கல் செய்திருந்தேன். என்னுடைய மனு எண் W.P. (MD) No. 1644 of 2020. மற்றவர்களும் இதற்காக மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.

இவ்வழக்கில் எதிர் மனுதாரர்களான இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், சென்னை அவர்களும்,
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்,தஞ்சாவூர் அவர்களும்,
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் அவர்களும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் வழிபாட்டில் தமிழும் சமற்கிருதமும் சமமான முக்கியத்துவத்துடன் கடைபிடிக்கப்படுகின்றன என்றும், நடைபெறவுள்ள குடமுழுக்கிலும் மேற்படி இரு மொழியும் சமமான முக்கியத்துவத்துடன் கடைபிடிக்கப்படும் என்றும் உறுதி கூறியிருந்தனர்.

அவ்வுறுதி மொழியை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு, நடைபெறவுள்ள குடமுழுக்கில் தமிழ் – சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் எந்தக் குறையும் இல்லாமல், சமமாகச் செயல்படுத்துமாறு 31.01.2020 அன்று ஆணை இட்டது.

இவ்வாறு இரு மொழிகளையும் இக்குடமுழுக்கு வழிபாட்டு மந்திரங்களாகச் சமமாகக் கடைபிடித்து செயல்படுத்திய அறிக்கையை விழா நிறைவுற்று 4 வாரங்களுக்குள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யுமாறு அத்தீர்ப்பில் நீதிபதிகள் மாண்புமிகு எம். துரைசாமி அவர்களும், டி. இரவீந்திரன் அவர்களும்
தங்கள் தீர்ப்பில் கோரியிருந்தார்கள்.

நானும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவின் மற்ற நிர்வாகிகளும்
01.02.2020, 02.02.2020, 03.02.2020 ஆகிய_நாட்களில்
தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குள் சென்று, யாகசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பார்த்தோம்.

யாகசாலையில் தெய்வப்படிமங்கள் இல்லாத இடைவெளிப் பாதையில் சமற்கிருதம் சொல்வோரும், தமிழ் ஓதுவார்களும் சமமான முறையில் முறையே சமற்கிருத சுலோகங்களையும், தமிழ்த் திருமுறைகளையும் சொல்கிறார்கள்.

ஆனால்,யாகசாலைக்குள் தெய்வப் படிமங்கள் இருக்கின்ற குண்டம் – வேதிகை அருகில் காலையில் எழுந்தருளச் செய்தல் தொடங்கி பல்வேறு நேரங்களில் சமற்கிருத மந்திரங்களை மட்டுமே ஓதுகிறார்கள்.
தமிழ் மந்திரங்கள் ஓதுவோர்களை அந்த இடங்களில் அனுமதிக்கவில்லை. அந்த இடங்களில் தமிழ் மந்திரங்கள் ஓதப்படவில்லை.

இந்த பாகுபாடு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கும் செயலாகும்.

இந்தப் பாகுபாடு நீக்கப்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை இணை ஆணையர் அவர்களிடமும் தஞ்சை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையரிடமும் 03.02.2020 அன்று முற்பகல் நேரில் முறையிட்டோம்.

ஆனால், இன்றுவரை இந்த மொழிப் பாகுபாடு நீக்கப்படவில்லை.தமிழ் மந்திரங்களுக்குரிய
இடம் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் நாளை (05.02.2020) நடைபெறவுள்ள பெருங்குடமுழுக்கின் போதும்
கருவறை, யாகசாலை, கோபுரக்கலசம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் தமிழ் மந்திரங்கள் புறக்கணிக்கப்படுமோ
என்று அச்சப்படுகிறோம்.

எனவே, தாங்கள் அன்பு கூர்ந்து இதில் தலையிட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளைத் தீர்ப்பின்படி யாகசாலை குண்டம்,வேதிகை,பெருவுடையார் கருவறை,அர்த்த மண்டபம்,மகா மண்டபம்,கோபுரக் கலசம் முதலிய இடங்களில் சமற்கிருதத்திற்கு நிகராக சைவ சமய அறவோர்கள் தமிழ் மந்திரக் கிரியைகள் செய்வதற்கும் ஓதுவதற்கும் வாய்ப்பளிக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு பெ.மணியரசன் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

குடமுழுக்கில் தமிழ் வேண்டும் என்று வழக்கு தொடுத்து வெற்றிகரமான தீர்ப்பு பெற்றதோடு நின்று விடாமல் தொடர்ந்து அது நடைமுறைப்படுத்தப் படுகிறதா? என்று விடாது கண்காணிக்கும் பெ.மணியரசன் குழுவினரை தமிழுணர்வாளர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Response