ஆழிப்பேரலை 15 ஆம் ஆண்டு – பொ.ஐங்கரநேசனின் எச்சரிக்கை

டிசம்பர் 26, 2004 இல் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்தது நிலநடுக்கம். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையான நிலநடுக்கம் ஆகும்.

இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் உயிரிழந்தோர் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 6,400 பேர், தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது.

இந்த கடற்கோள் நினைவு நாளை இலங்கை வடமாகாண சபை இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இத் தினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

பூமியின் வளங்கள் யாவும் மனிதன் உட்பட உலகின் அத்தனை உயிரிகளுக்கும் அவற்றின் வருங்காலத் தலைமுறைகளுக்கும் ஆனவை. ஆனால், மனிதர்கள் நாம் இயற்கை வளங்களை எமக்கானதாக மட்டுமே கருதி, எமது சந்ததிகளுக்குக்கூட மிச்சம்மீதி வைக்க விரும்பாதவர்களாகச் சூறையாடத் தலைப்பட்டுள்ளோம்.

பெற்றோலிய எரிபொருட்களின் மிதமிஞ்சிய நுகர்வு, காடுகளின் கபளீகரம், கட்டுப்பாடற்ற மணல் அகழ்வு, கடலையே கருவாடாக்கும் மீன்பிடி, நீரின் அடிமடியில் கைவைக்கும் ஆழ்குழாய்க் கிணறுகள், இயற்கைச் சுழற்சிக்கு உட்படாமல் மலைபோலக் குவியும் பிளாஸ்ரிக் கழிவுகள் என்று பூமியைப் புண்ணாக்கி வருகின்றோம்.

மனிதனில் ஒட்டுண்ணிக்கிருமிகள் தொற்றிப் பெருகும்போது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு கிருமிகளைத் தாக்கத் தலைப்படும். மனிதர்களுக்கும் கிருமிகளுக்கும் இடையிலான இந்த மோதலில் மனிதனின் கையோங்கும் போது கிருமிகள் அழிவதும், கிருமிகள் மேலோங்கும்போது மனிதர்கள் நோயுற்று மடிவதும் நியதி.

இதே போன்றே பூமித் தாயும் தன்னைப் புண்ணாக்கும் ஒட்டுண்ணி மனிதர்களிடம் இருந்து தன்னைத் தற்காக்கும் மோதலை ஆரம்பித்துள்ளாள். கடும் வறட்சி, காலம் தப்பிய அடைமழை, கடல்மட்ட உயர்வு, அடிக்கடி வேகம் பெறும் சூறாவளிகள் போன்ற இயற்கையின் சீறறங்கள் இந்த மோதலின் வெளிப்பாடுகளே ஆகும்.

மனிதரின் உடலில் காணப்படும் பக்றீரியங்கள் மனிதனுக்கு நன்மை செய்து மனிதர்களிடம் இருந்தும் நன்மையைப் பெறுவது போன்று, மனிதர்களும் பூமித்தாய்க்கு நன்மை செய்து, பூமித்தாயிடம் இருந்தும் நன்மையைப் பெறுகின்ற ஒன்றையொன்று விருந்தோம்பும் ஓம்புயிரிகளாக, ஒன்றியவாழிகளாக வாழ முற்பட்டாலொழிய இயற்கையின் பேரனர்த்தங்களில் இருந்து இருந்து மனுக்குலம் தப்பிக்கவே இயலாது.

நாங்கள் சந்தித்த பேரனர்த்தமான கடற்கோளின் நினைவுநாளில் பூமித்தாயுடனான உறவை ஒட்டுண்ணிகளாக அல்லாமல் ஓம்புயிரிகளாகப் பேணுவோம் என்பதை ஒரு சபதமாக ஏற்றுச் செயற்படத் தொடங்குவோம். இதுவே கடற்கோளால் காவு கொள்ளப்பட்ட ஆன்மாக்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகவும் அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response