கர்நாடக அரசு மத்திய அரசு இணைந்து சதி தமிழக முதல்வர் அமைதி ஏன்? – பெ.ம கேள்வி

மேக்கேத்தாட்டு அணைக்கான அனுமதி பரிசீலனையில் உள்ளதாகக் கூறிய ஒழுங்காற்றுக் குழுத் தலைவர்க்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன்? என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்…..

திருச்சியில் கடந்த 31.10.2019 அன்று நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தின் முடிவில், அதன் தலைவர் நவீன்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறிய கருத்துகள் டெல்டா மக்களுக்குப் பேரச்சத்தை உண்டாக்கியுள்ளன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் புறம்பாகச் செயல்படும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்காதது பெருங்கவலை அளிக்கிறது.

குறிப்பாகக் கடந்த 2019 சூன் – சூலை மாதங்களில், கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் அளவுக்கேற்ப, தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய விகித அளவுத் (Pro Rata) தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்துவிடவில்லை.

எடுத்துக்காட்டாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சூன் மாதத்திற்குக் கர்நாடகம் 9.19 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் திறந்துவிட வேண்டும். கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால், குறைந்த விகிதத்திற்கேற்ப 6 ஆ.மி.க.வோ அல்லது 5 ஆ.மி.க.வோ திறந்து விட்டிருக்க வேண்டும். அதேபோல் சூலை மாதமும் விகித அடிப்படையில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். அவ்வாறு திறந்து விட்டிருக்குமாறு காவிரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடகத்திற்குக் கட்டளை இட்டிருக்க வேண்டும்.

சட்டப்படியான அந்தக் கடமையைச் செய்யாத ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார், 2019 சூன் – சூலை மாதங்களில் கர்நாடக அணைகளில் வழக்கமான அளவு தண்ணீர் இல்லை என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது, கர்நாடகத்தின் அடாவடித்தனங்களுக்குக் காவிரி ஒழுங்காற்றுக் குழு துணை போவது போல் இருக்கிறது.

இரண்டாவதாக, தேக்க முடியாத வெள்ள நீரைத் திறந்து விடும் கர்நாடகம், அதை மாதத் தவணை நீரில் கழித்துக் கொள்ளுமாறு தமிழ்நாட்டிற்குக் கூறுவது சரியல்லவே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுபற்றித் தமிழ்நாடு எழுப்பியுள்ள கேள்வி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆய்வில் இருக்கிறது என்று மொட்டையாக விடை கூறியுள்ளார் நவீன்குமார்.

ஆகத்து – செப்டம்பர் மாதங்களில் கர்நாடகம் தனது அணைகளின் பாதுகாப்புக் கருதி, வெளியேற்றும் வெள்ள நீர் மேட்டூர் அணையில் நிரம்பி, தமிழ்நாடும் கடலுக்குத் திறந்து விடுகிறது. இந்தத் தண்ணீர் திசம்பர் – சனவரி மாதங்களுக்கு எப்படிக் கிடைக்கும்?

மாதத் தவணை நீரை, மாதாமாதம் தான் திறந்துவிட வேண்டும். முதல் மாதத்தில் திறக்க வேண்டிய தண்ணீர் பாக்கி இருந்தால், அதை அடுத்த மாதங்களில் தமிழ்நாட்டிற்கு சேர்த்துத் திறந்து விட வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. வெள்ள மிகை நீரை எதிர்வரும் மாதங்களுக்குரிய நீரில் தமிழ்நாடு கழித்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறவில்லை.

மேக்கேத்தாட்டு அணை அனுமதி பற்றிச் செய்தியாளர்கள் கேட்டபோது, காவிரி மேலாண்மை ஆணையம் தடையில்லாச் சான்று வழங்கினால்தான் நீர்வளத்துறை அனுமதி அளிக்க முடியும் என்று நவீன்குமார் கூறினார். அடுத்து அவர் சொன்னதுதான், அதிர்ச்சி அளிக்கக் கூடியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில், மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்குவது பற்றி அதன் தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றார்.

இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு, நடுவண் அரசின் நீர்வளத்துறை அனைத்தும் கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களுக்குச் சாதகமாகத்தான் செயல்பட்டுள்ளன. இப்பொழுதும் நடுவண் அரசின் நீர்வளத்துறை மேக்கேத்தாட்டு அணை கட்டுவதற்கான விரிவான செயல்திட்ட அறிக்கையை கர்நாடகத்திடம் கோரிப் பெற்றுள்ளது.

எனவே, மேக்கேத்தாட்டு அணை கட்ட, கர்நாடகத்திற்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படக் கூடிய அபாயம் உள்ளது. கடந்த காலத்தில் ஏமாவதி, ஏரங்கி, கபினி, அர்க்காவதி போன்ற சட்ட விரோத அணைகள் கட்ட கர்நாடகத்திற்குக் கொல்லைப்புற வழியில் ஆதரவாகவே இந்திய அரசு செயல்பட்டது.

திருச்சியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார் தமிழ்நாட்டிற்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகவும் கூறிய கருத்துகளுக்குத் தமிழ்நாடு அரசு இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி டெல்டா மாவட்டங்களின் மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது.

பொதுப்பணித்துறையைத் தம் பொறுப்பில் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் நிலைபாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response