ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்குச் சென்ற அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது….
இந்தித் திணிப்புக்கு எதிராக தி.மு.க. போராட்டம் அறிவித்தது. அதே நேரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது கருத்தை திரும்பப் பெற்றார். அவரது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியதுடன், இந்தியை இரண்டாவது மொழியாகக் கற்க வேண்டும் என்று கூறினேன் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். மீண்டும் இந்தியைத் திணிக்க முயன்றால் தொடர்ந்து எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அதன்பின் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
கடந்த இரண்டு நாட்களாக நான் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளில் தீவிரமாக இருந்ததால், அந்த விழாவைப் பார்க்கவில்லை. எனவே நடிகர் விஜய் என்ன கருத்து கூறினார் என்பது தெரியவில்லை. தெரியாமல் பதில் கூறுவது சரியாக இருக்காது என்றார்.
இதுபோல் நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது குறித்த ஒரு கேள்விக்கு, இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதே சரியில்லை. அவரிடம் கேட்க வேண்டும் என்றார்.