
இந்திய மட்டைப்பந்து அணியில் இருப்பவர் தினேஷ் கார்த்திக், தமிழகத்திச் சேர்ந்த இவர், ஐ.பி.எல். போட்டியில் இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக உள்ளார்.
இவர்,மேற்கிந்தியத் தீவுகளில் நடந்து வரும் கரிபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் சில ஆட்டங்களைப் பார்க்க அங்கு சென்றார். டிரின்பகோ அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமானதாகும்.
டிரின்பகோ அணியின் சீருடையுடன் அவர்களது ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை கிளம்பியது.
ஐ.பி.எல். தவிர வேறு எந்த தனியார் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும், அது தொடர்பான நிகழ்வுகளிலும் வீரர்கள் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருக்கும் அவர் அனுமதி பெறாமல் சென்றதால் உங்களது ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று விளக்கம் கேட்டு கிரிக்கெட் வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை அடுத்து, தினேஷ் கார்த்திக், விதிமுறையை மீறி நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டார்.
இது தொடர்பாக அவர் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிய விளக்கக் கடிதத்தில்,
மேற்கிந்தியத் தீவுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க நான் அங்கு செல்லவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லத்தின் அழைப்பின் பேரில் சென்றேன். டிரின்பகோ அணியின் பயிற்சியாளராகவும் அவர் இருக்கிறார்.
கொல்கத்தா அணி தொடர்பாக ஆலோசிக்க இந்தப் பயணம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியதாலேயே சென்றேன். இருப்பினும் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் பயணம் மேற்கொண்டதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியிருந்தார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் தினேஷ் கார்த்திக் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்றும் இந்த பிரச்சினை இத்துடன் முடித்து கொள்ளப்பட்டது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்துள்ளது.


